உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் கிரிக்கெட் போட்டிகள் கடந்த இரண்டு மாதங்களாக முடங்கியுள்ளன.
இந்த நிலையில் கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த பிறகு பயிற்சிக்கு திரும்பும் இந்திய வீரர்கள் அனைவருக்கும் கண் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என பெங்கால் கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை கடந்த மூன்று ஆண்டுகளாக கண் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பிசிசிஐ அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கிரிக்கெட் விளையாட்டில் வீரர்களின் கை-கண் ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய வீரர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக நான்கு மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் யாருக்காவது சிக்கல் இருந்தால், அவர்களுக்கு லென்ஸ் அல்லது கண்ணாடிகள் வழங்கப்படும். போட்டியின்போது வீரர்கள் 140 கி.மீ அல்லது அதற்கு மேல் வேகத்தில் வீசும் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும். அப்போது கண் பிரச்னையால் பந்தை தவறவிட்டால் அது வீரர்களின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்பதால் வீரர்களுக்கு கண் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளன "என்றார்.