விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு, ராஜஸ்தான், சர்வீசஸ், பீஹார் ஆகிய அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்திருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி பெங்கால் அணியை எதிர்கொண்டது. இதில், முதலில் டாஸ் வென்ற பெங்கால் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் ஜெகதீசன், அபினவ் முகுந்த், ஹரி நிஷாந்த் என தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். அதன் பின் பாபா அபரஜித், விஜய் சங்கர் இணை அணியின் ரன்கணக்கை உயர்த்த தொடங்கினர்.
அபரஜித் 34 ரன்களிலும், விஜய் சங்கர் 41 ரன்களிலும் வெளியேற, அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், ஷாருக் கான் இணை தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கியது.
இந்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 62 பந்துகளில் 97 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து சிறப்பக விளையாடிய ஷாருக் கான் அதிரடியாக ஆடி 69 ரன்களை சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.
இதன்மூலம் தமிழ்நாடு அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்களை எடுத்தது. பெங்கால் அணி தரப்பில் அஷோக் டிண்டா, ஆகாஷ் தீப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன் பின் கடின இலக்குடன் களமிறங்கிய பெங்கால் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் அபிமன்யூ ஈஸ்வரன், மனோஜ் திவாரி, அபிஷேக் ராமன் என அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் அந்த அணி 21 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன் பின் களமிறங்கிய ஷபாஸ் அஹ்மத் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்த தொடங்கினார். அவர் 136 பந்துகளில் 107 ரன்களை அடித்து வெளியேறினார். இதனால் பெங்கால் அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தமிழ்நாடு அணி சார்பில் அபரஜித், விக்னேஷ், நடராஜன், எம்.அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன் மூலம் தமிழ்நாடு அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் பெங்கால் அணியை வீழ்த்தி இத்தொடரில் தொடர்ந்து நான்காவது வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது.
இதையும் படிங்க: மிரட்டி விஜய் சங்கர்; தமிழ்நாடு ஹாட்ரிக் வெற்றி!