வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழைக்காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் நேற்று டிரினிடாட் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 42 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்னில் ஆட்டமிழந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 59 ரன்னில் தோல்வியைத் தழுவியது.
எனினும் இப்போட்டியில் 11 ரன்கள் அடித்த கிறிஸ் கெயில், புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பிரய்ன் லாராவின் சாதனையை அவர் தகர்த்துள்ளார். முன்னதாக பிரய்ன் லாரா 299 போட்டிகளில் 10,405 ரன்கள் குவித்ததே வெஸ்ட் இண்டீஸ் வீரர் குவித்த அதிகபட்ச ரன்னாக இருந்தது.
அதை தற்போது கெயில் தனது 300ஆவது போட்டியில் முறியடித்துள்ளார். அது மட்டுமல்லாது அதிக ஒருநாள் போட்டியை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனைக்கும் அவர் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.