ஆர்ட் ஆர்டிஸ்ட் என்ற மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. அதில், டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்றவாறு விளையாடுவதில் இந்திய வீரர் புஜாரா ஆர்ட் என்றால் அதில், ஆர்டிஸ்ட் டிராவிட்தான்.
தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் ரசிகர்களுக்கு டெஸ்ட் போட்டி மீது இருந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகிறது. இந்த சூழலில் 150 ஆண்டுகளுக்கும் மேல் பாரம்பரியாக ஐந்து நாட்களாக நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாக குறைப்பது குறித்து ஐசிசி ஆலோசனை நடத்திவருகிறது.
பல ஆண்டுகாலமாக டிராவை நோக்கி சென்றுகொண்டிருந்த டெஸ்ட் போட்டிகள் தற்போது வெற்றி என்னும் முடிவை நோக்கி செல்வதுதான் இதற்கு முக்கிய காரணம் என்பது வேறுகதை.
ஸ்டீவ் ஸ்மித், கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர்களுக்கு மத்தியில் டெஸ்ட் போட்டிகளில் புஜாராவும் கொண்டாடப்படிய வீரர்தான். ஏனெனில் தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டர் என புஜாராவை மட்டும்தான் ஏற்றுகொள்ள முடியும். இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பல சரித்திரம் படைத்ததற்கு டிராவிட்டின் பங்களிப்பு அளப்பரியது. டிராவிட்டின் ஓய்வுக்கு பின் தற்போதைய டெஸ்ட்டில் அவரது பாணியை முயற்சிக்கும் ஒரே வீரர் புஜாராதான்.
டிராவிட்டை போல கட்டையை போட்டு விளையாடுவது, எதிரணி பந்துவீச்சாளர்களை தனது டிஃபெண்டிங் ஷாட்டுகள் மூலம் சோர்வடைய செய்து ரன்களை விளாசுவது, மூன்றாவது வரிசை மட்டுமில்லாமல் ஓப்பனிங்கிலும் களமிறங்கி பத்து விக்கெட்டுக்கும் நின்று விளையாடுவது என டிராவிட்டின் முக்கியமான குணாதிசயங்கள் புஜாராவிடமும் தென்படுகிறது.
புஜாராவை தற்கால டிராவிட் என அழைப்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2019-20 டெஸ்ட் தொடர்தான். கோலி தலைமையிலான இந்திய அணி 71 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் வென்றதற்கு முக்கிய காரணம் அவர்தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாவது வரிசையில் களமிறங்கி தனது வழக்கமான பேட்டிங்மூலம் முதல் இன்னிங்ஸில் 123 ரன்கள் விளாசிய புஜாரா, இரண்டாவது இன்னிங்ஸில் 71 ரன்கள் அடித்தார். இவரது ஆட்டத்தால் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.
அப்படியே சற்று 2003 -04 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை பிளாஷ்செய்து பார்ப்போம். அதில், அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டிராவிட் 233 ரன்கள் அடித்தார். பின் இரண்டாவது இன்னிங்ஸில் 72 ரன்கள் அடித்து அதகளப்படுத்தினார். இதனால் இந்திய அணி அப்போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சரித்திர வெற்றிபெற்றது.
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் இருவரும் தங்களது முதல் சதத்தை பதிவு செய்தது அடிலெய்டில்தான். இதுமட்டுமின்றி, 2003இல் டிராவிட் ஆட்டநாயகன் விருதை பெற்றதை போல 2019இல் புஜாராவும் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 2003க்கு பின் இந்திய அணி அடிலெய்டில் வெற்றிபெற்றதும் 2019இல்தான்.
டெஸ்ட் போட்டிகளில் புஜாரா டிராவிட்டை போலவே தனது 67ஆவது இன்னிங்ஸில் 3000 ரன்கள், 84ஆவது இன்னிங்ஸில் 4000 ரன்கள், 108ஆவது இன்னிங்ஸில் 5000 ரன்களைக் கடந்தார். அதன் அடிப்படையிலும், புஜாராவின் அடிலெயிட் இன்னிங்ஸிலிருந்தும்தான் ரசிகர்கள் இவரை இந்திய அணியின் புதிய பெருஞ்சுவர் என அழைக்கத் தொடங்கினர். டெஸ்டில் டிராவிட்டை போல இவர் விளையாட வேண்டிய ஆட்டங்கள் இன்னும் அதிகம் இருக்கின்றன.
இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டின் பிகாசோ! #RAHULDRAVID