கிரிக்கெட் விளையாட்டு என்பது பேட்டிங், பவுலிங் என இரண்டு பிரிவுகளாக பார்க்கப்படுகிறது. மொத்தம் 11 பேர் விளையாடக் கூடிய இந்த விளையாட்டில் நிச்சயமாக ஆறு முதல் ஏழு பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள். ஆனால் அதே அணியில் இடம்பெற்றிருக்கும் பவுலர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.
ஒரு போட்டியில் பேட்ஸ்மேன் சொதப்பும் பட்சத்தில் நிச்சயம் வேறு ஒரு வீரர் ரன்களை அடித்து ஈடுகட்டுவார். ஆனால் பந்துவீச்சாளர்கள் சொதப்பும் சமயங்களில் நிச்சயம் அந்த அணி அடிவாங்கும் நிலைக்குத் தள்ளப்படும். சில போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் சொதப்பல் ஆட்டத்தை ஈடுகட்டும் வகையில் பந்துவீச்சாளர்கள் தங்களின் அசாதாரண பவுலிங்கால் எதிரணியை தோல்வியடைய வைத்த கதையும் இங்கு உண்டு.
இப்படி ஒரு அணியின் முக்கிய அங்கமாக பார்க்கப்படும் பவுலர்கள் விக்கெட் வீழ்த்துவதையே பெரிய கௌரவமாகக் கருதுகின்றனர். அதிலும் ஹாட்ரிக் விக்கெட் என்றால் சொல்லவா வேண்டும். இங்கும் ஒரு இந்திய பவுலர் ஹாட்ரிக் சாதனையை முதன்முறையாக நிகழ்த்துகிறார். அதுவும் சாதாரண போட்டியில் அல்ல, உலகக்கோப்பை தொடரில்.
கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றிய பின் உலக கிரிக்கெட்டின் பார்வை இந்திய வீரர்கள் மீது படத் தொடங்கியது. அதன்பின் பல்வேறு வெற்றிகளைக் குவித்த இந்திய அணி, அடுத்ததாக 1987ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக கெத்தாக களமிறங்கியது.
இந்த உலகக்கோப்பைத் தொடரையும் இந்திய அணி கைப்பற்றும் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது. காரணம் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த், ரவி சாஸ்திரி, திலிப் வெங்சர்கர், சேதன் சர்மா, அசாருதீன் என பல நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஒரு ரன்னில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றிருந்தாலும் தொடரின் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. பின்னர் இறுதியாக இந்திய அணி மகாராஷ்ட்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. நியூசிலாந்து அணியின் மேல்வரிசை வீரர்கள் ஓரளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அந்த அணி 41 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களுடன் ஆடிக்கொண்டிருக்கிறது. இதனால் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு நல்ல இலக்கை நிர்ணயிக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், அந்தக் கனவை சுக்குநூறாக உடைத்தார் இந்திய பவுலர் சேதன் சர்மா.
அப்போட்டியில் அதுவரை விக்கெட் ஏதும் எடுக்காமல் இருந்த சேதன் சர்மா, அந்த ஓவரில் முதல் மூன்று பந்துகளையும் டாட் பாலாக வீசினார். நான்காவது பந்தில் தான் படைக்கும் சாதனைக்கு பிள்ளையார் சுழியாக சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரூதர்போர்டை போல்டாக்கினார் அந்த ஆறடி உயர இந்திய பவுலர்.
அதன்பின் இயான் ஸ்மித் வந்தார். அவரையும் சேதன் அதே பாணியில் போல்டாக்கி பெலியனுக்கு அனுப்பினார். இதைக் கண்ட ரசிகர்கள் உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்தனர். அப்போது தனது கேப்டன் கபில் தேவிடம் அறிவுரை கேட்ட சேதன் சர்மா, முந்தைய இரண்டு பந்துகளை விட நேராக ஸ்டெம்பை நோக்கி வீசினார்.
இம்முறை சாட்பீல்டு போல்டாகி வெளியேறியதால் இம்முறையும் பந்துவீச்சாளருக்கே வெற்றி. இதனால் உலகக்கோப்பை அரங்கில் முதன்முறையாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் சேதன் சர்மா. அதோடு உலக ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் அடைகிறார்.
உலக கிரிக்கெட்டில் இந்திய பவுலராக சேதன் சர்மா சாதனை நிகழ்த்திய தினம் (அக்டோபர் 31) இன்றுதான். இப்போட்டியில் 85 பந்துகளில் சதம் விளாசி கவாஸ்கர் தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தையும் பூர்த்தி செய்தார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 85 பந்துகளில் 103 ரன்கள் (10 பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள்) விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களை குவித்தது. அதன்பின் துரத்தலை தொடங்கிய இந்திய அணி, ஸ்ரீகாந்த் 75, கவாஸ்கர் 103*, அசாருதீன் 41 ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஏ பிரிவில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு சென்றது.
உலகக்கோப்பை தொடரில் சேதன் சர்மா ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தி 12 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் வீரர் சக்லின் முஸ்டாக், 1999 உலகக்கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். அதன்பின் ஒவ்வொரு உலகக்கோப்பைத் தொடரிலும் ஹாட்ரிக் சாதனைகள் நிகழ்த்தப்பட்டாலும் சேதன் சர்மாவின் சாதனையே என்றும் முதன்மையான ஒன்றாகும்.