தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரின் 13ஆவது லீக் போட்டியில் கோவை கிங்ஸ் அணியும் சேப்பாக் கில்லீஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷாருக் கான் மற்றும் கேப்டன் அபினவ் முகுந்த் இருவரும் நிதானமாக ஆடினர்.
ஆனால், சேப்பாக் கில்லீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் குமாரின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இருவரும் அவரிடம் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் வந்த ரங்கராஜன் மற்றும் அனிருத் இருவரையும் ஹரிஸ் குமாரே காலி செய்தார். பின்னர், வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னிலே ஆட்டமிழந்ததால் கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.
![ஹரிஸ்குமார்-பதானி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3973615_ah.jpg)
115 ரன் என்ற எளிய இலக்கை எதிர்த்து ஆட வந்த சேப்பாக் கில்லீஸ் அணியின் தொடக்க வீரர் கோபிநாத் அதிரடியாக ஆடி கோவை கிங்ஸ் அணி வீரர்களின் பந்தைப் பதம் பார்த்தார். அதிரடியாக ஆடிய அவர் 10 ஃபோர்கள் 4 சிக்ஸர்கள் என 82 எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கங்கா ஸ்ரீதர் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் எடுத்திருந்தார்.
![கோபிநாத்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3973615_sh.jpg)
சேப்பாக் கில்லீஸ் அணி 13.3 ஓவர்களிலே தன் இலக்கை எட்டிப் பிடித்து எளிதில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் சேப்பாக் கில்லீஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.