தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நான்காவது சீசனுக்கான இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
குறிப்பாக, கோபிநாத் (0), கங்கா ஸ்ரீதர் ராஜூ (4), விஜய் சங்கர் (1) ஆகியோர் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். இதனால், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 4.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 19 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறியது. இந்த நிலையில், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் கவுசிக் காந்தி (22), உமாசங்கர் (21) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் சேப்பாக் அணி 11 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 55 ரன்களை எடுத்திருந்தது.
இந்த நிலையில், உத்திரசாமி சசிதேவ் - முருகன் அஷ்வின் ஜோடி சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 33 பந்துகளில் ஒரு பவுண்டரி, மூன்று சிக்சர்கள் என 44 ரன்கள் எடுத்த உத்திரசாமி சசிதேவ் ரன் அவுட் ஆனார். இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து, 126 ரன்களை எடுத்துள்ளது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் ஜகநாதன் கவுசிக், மோகன் அபிநவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.