கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே வீரர்களின் பயிற்சிக்கும் இதுவரை விளையாட்டு சங்கங்கள் முழுமையான அனுமதியைக் கொடுக்கவில்லை.
இந்நிலையில் ஓய்வு நாள்களில் மகளிர் கிரிக்கெட் யு-19 வீராங்கனைகளின் உடற்தகுதியையும், மனநிலையையும் பாதுகாப்பதற்காக பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பாக பவர் யோகா வகுப்பினை இணையம் மூலம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இணையவழி வகுப்பினை பவர் யோகா நிபுணர் சுமன் பாட் எடுக்கவுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ''யோகா என்பது நமது கலாச்சாரத்திலேயே உள்ளது. பவர் யோகா என்பது அறிவியல் மற்றும் கலாச்சாரம் இரண்டையும் சேர்த்த ஒன்று தான். இந்த பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் நமது மனநிலையையும், வலைந்து கொடுக்கும் தன்மையையும் முன்னேற்ற முடியும்'' என்றார்.
பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பாக அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஒத்தி வைத்துவிட்டு, மாணவர்களின் உடல்நலனில் அக்கறை செலுத்துமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.