உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதயை சூழலில் இந்தத் தொடர் தள்ளிவைக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
இதனிடையே, இந்த தொடர் 2022ஆம் ஆண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இது தொடர்பாக ஐசிசி நேற்று வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், எந்த முடிவும் எடுக்கவில்லை. மேலும் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து வரும் ஜூன் 10ஆம் தேதிதான் முடிவு எடுக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் அடுத்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்த ஐசிசியிடம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஏர்ல் எடிங்ஸ் ஐசிசியின் நிதி வணிக விவகாரக் குழுவிற்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர், டி20 உலகக்கோப்பை தொடர் 2022ஆம் ஆண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டால் அந்தத் தொடரை நடத்த எங்களுக்கு விருப்பமில்லை. மாறாக அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரை நடத்த எங்களுக்கு விருப்பம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பிசிசிஐ அலுவலர் ஒருவர் கூறுகையில், ஒருவேளை அடுத்தாண்டு டி20 உலகக்கோப்பை நடத்தும் உரிமத்தை பிசிசிஐ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கினால், அதற்கு பதிலாக 2022இல் டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் உரிமை இந்தியாவிற்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், அப்படி நடைபெற வாய்ப்பில்லை. ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை நடைபெறவில்லை என்றால், 2022ஆம் ஆண்டில் நடைபெறும் என நாங்கள் உணர்கிறோம் என்றார்.
இதனிடையே, டி20 உலகக்கோப்பை தள்ளிவைக்கப்பட்டால் அந்த இடைவெளியில் (அக்டோபர், நவம்பர்) ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ஐசிசி எடுக்கும் முடிவை பொறுத்தே ஐபிஎல் தொடர் நடத்த பிசிசிஐ திட்டமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உள்ளூர் கிரிக்கெட்டுக்கு வாய்ப்பு இல்லை’ - ஈசிபி