ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளராக வலம் வரும் இந்திய வீரர் பும்ரா, டெஸ்ட் போட்டிகளிலும் அசத்திவருகிறார். இவரது சிறப்பான பந்துவீச்சினால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது. இந்தத் தொடரில் பும்ரா ஒரு ஹாட்ரிக் உட்பட 13 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக, முதல் டெஸ்ட் போட்டியில் அவர் ஆறு விக்கெட்டுகளை எடுத்ததன்மூலம், குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்தார்.
இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலை அறிவித்துள்ளது. அதில், ஏழாவது இடத்தில் இருந்த பும்ரா தற்போது 835 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு அறிமுகமான பும்ரா தனது நான்காவது தொடரிலேயே இந்த முன்னேற்றத்தை அடைந்திருப்பது, அவரது பந்துவீச்சுத் திறனை வெளிப்படுத்துகிறது.
அதேபோல், இந்தத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் சிறப்பாக பந்துவீசினார். இரண்டு போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளை எடுத்தன்மூலம், அவர் 11ஆவது இடத்தில் இருந்து 814 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இப்பட்டியலில், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பெட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா 858 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர். ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் பும்ரா முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.