குளோபல் டி20 போட்டியின் 10ஆவது லீக் போட்டியில் ரயட் எமிரிட் தலைமையிலான வின்னிபெக் ஹாக்ஸ் அணியும், காலின் முன்ரோ தலைமையிலான பிராம்டன் வொல்வ்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற பிராம்டன் வொல்வ்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, ஆடிய ஹாக்ஸ் அணியின் அதிரடி வீரர்கள் கிரிஸ் லின், ஜே பி டுமினி, பிராவோ ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதனால் 18.5 ஓவர்களிலேயே ஹாக்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது.
அதன்பின் 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வொல்வ்ஸ் அணி, கேப்டன் காலின் முன்ரோவின் அதிரடி ஆட்டத்தால் 14.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமிழந்து இலக்கை அடைந்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வின்னிபெக் ஹாக்ஸ் அணியை வென்றது பிராம்டன் வொல்வ்ஸ்.
சிறப்பாக விளையாடிய காலின் முன்ரோ 31 பந்துகளில் 53 ரன்களை விளாசி ஆட்டத்தின் வெற்றிக்கு உதவியதால் ஆட்ட நாயகனாத் தேர்வு செய்யப்பட்டார்.