பிரையன் லாரா... பெயருக்கு ஏற்றார்போல் இன்டலிஜென்ட் கிரிக்கெட்டர். கடவுள் வலதுகை பேட்ஸ்மேனாக பிறந்திருந்தால் சச்சின் டெண்டுல்கராக பிறந்திருப்பார். அதே கடவுள் இடதுகை பேட்ஸ்மேனாக பிறந்திருந்தால் நிச்சயம் பிரையன் லாராவாகத்தான் பிறந்திருப்பார்.
என்னடா இவன் தொடங்கத்திலேயே லாராவை சச்சினோடு ஒப்பிடுகிறானே எனக் கேட்பவர்களுக்கு, ஒரே ஒரு விளக்கம்தான். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின், லாரா இருவரும் கோலோச்சிய காலம் முதல் இன்று வரை இவ்விருவருக்கிடையே மிகப்பெரிய ஒப்பிடுதல் இருந்துவருகிறது.
ஒரு முறை ஆஸ்திரேலிய நட்சத்திர பந்துவீச்சாளர் ஷேன் வார்னேவிடம், சச்சின்... லாரா... இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்? எனக் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, அவர் அளித்த பதில்: நான் வாழ்க்கை முழுவதும் பேட்டிங் செய்ய வேண்டும் என நினைத்தால் சச்சினைத் தேர்வு செய்வேன். அதே ஒரு டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் சதம் அடித்து அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்றால் நிச்சயம் லாராவைத்தான் தேர்ந்தெடுப்பேன் எனக் கூறினார். அதுதான் லாரா!
தனது அப்பாவின் ஆசைக்காக கிரிக்கெட் விளையாட தொடங்கியவருக்கு, முதல் பேட் தென்னை மட்டையிலிருந்துதான் கிடைத்திருக்கிறது. அங்கிருந்து தொடங்கிய பயணத்தில் 1988ஆம் ஆண்டு முதல் தர போட்டிகளில் டிரினிடாட் அண்ட் டொபாக்கோ அணியில் இடம்பிடித்தார். அதன் இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களான மார்ஷல் மற்றும் கார்னரை எதிர்த்து பவுண்டரியும், சிக்சருமாக வெளுத்து வாங்கினார்.
1989ஆம் ஆண்டு, லாராவின் ஆட்டத்தைப் பார்த்து வெஸ்ட் இண்டீஸ் சர்வதேச அணியின் கதவு திறக்கப்பட்டது. ஆனால் யாருக்காக கிரிக்கெட் ஆடத்தொடங்கினாரோ, யாரால் கிரிக்கெட்டில் உயர்ந்தாரோ அவர் காலமானார். லாராவின் தந்தை இறந்ததால் அணியிலிருந்து தானாவே வெளியேறினார். அதே ஆண்டில்தான் இந்திய கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார்.
தந்தையின் இறப்புக்கு பிறகு, கிரிக்கெட் மட்டுமே குறிக்கோளாய் மாறியது. அடுத்த ஆண்டே மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பிடித்தார். தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 1992 உலகக்கோப்பைத் தொடரில் மிகப்பெரிய தோல்வி. அதேபோல் மறுபக்கம் ஆஸ்திரேலியா சர்வதேச கிரிக்கெட்டில் வீழ்த்த முடியாத அணியாக வலம்வரத் தொடங்கிய காலம்.
மூன்று வருடங்கள் ஒருநாள் போட்டிகள் ஆடினாலும், லாராவுக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிட்டவேயில்லை. 1993ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மூன்றாவது போட்டியில்தான் வாய்ப்பு கிடைக்கிறது. முதன் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 503 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் வாக் சதம் விளாசி கெத்து காமிக்க, ஆஸ்திரேலியாவின் பலமான பந்துவீச்சை எவ்வாறு சமாளிக்கபோகிறோம் என வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்களே கலங்கினர்.
தோல்வியடையாமல் டிரா செய்யப் போராட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் அப்போதைய கேப்டன் ரிச்சர்ட்சன் ஒருமுனையில் சதம் விளாசி களத்தில் நிற்க, மறுமுனையில் அறிமுக வீரராக லாரா வாள் வீசும் கரிகாலனாய் களத்தில் நின்று ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை தனது பேட்டிங்கால் கலங்கடித்தார்.
அந்த இன்னிங்சில் லாராவை விக்கெட் எடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் மிரண்டு போயினர். அந்த ஆட்டத்தில் லாரா 372 பந்துகளில் 277 ரன்கள் எடுத்தார். அதில் பவுண்டரிகள் மட்டும் 38. கவர் டிரைவ், ஃப்ளிக் ஷாட், ஸ்வீப் ஷாட், டவுன் தி ட்ராக் பவுண்டரி என அத்தனை ஷாட்களையும் நேர்த்தியாக ஆடி, தனது வருகையை உலக கிரிக்கெட்டுக்கு பறைசாற்றினார். லாராவுக்கு மிகவும் பிடித்த இன்னிங்ஸ் அதுதான். அதன் காரணமாகவே தனது முதல் மகளுக்கு சிட்னி எனப் பெயர் வைத்தார்.
அதனையடுத்து லாராவின் ஆட்டம் விஸ்வரூபம் எடுத்தது. 94இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 375 ரன்கள் எடுத்து சாதனை, இரட்டை சதம் என சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களை தூங்கவிடாமல் செய்தார். லாராவின் டெஸ்ட் வாழ்க்கையில் யாரும் மறக்க முடியாத நாள் என்றால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி நாளில் அடித்த 153 ரன்கள்தான்.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 308 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களில் லாராவை தவிர யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கடைசி நாளில் ஆஸ்திரேலியாவின் வார்னே, கில்லெஸ்பி, மெக்ராத் என ஜாம்பவான்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டும். வழக்கம்போல் தனது கண்களில் எவ்வித சலனமும் இன்றி லாரா களம் புகுந்தார். மெக்ராத் வீசிய பந்தை பேக் ஃபூட்டில் லாரா அடித்த கவர் டிரைவை அவர் வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாத அளவிற்கு ஆடினார். இதனால் வெறுப்பான மெக்ராத் பவுன்சரால் லாராவின் தலையைப் பதம் பார்க்க, அடுத்த பந்தை ஃபுல் ஷாட் மூலம் பவுண்டரிக்கு மின்னல் நேரத்தில் விரட்டி பதிலடி கொடுத்தார். ஒன்பது விக்கெட்டுகள் இழந்த பின்னும், லாரா அணியை தனி ஒருவனாய் நின்று வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது. அப்போட்டி ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அளவிற்கு மாறியது.
அந்தப் போட்டியின் நான்காவது நாள் இரவு, அடுத்த நாள் எவ்வாறு இருக்கப்போகிறது என்பதை நினைத்து பார்த்ததாக லாரா பின்நாட்களில் நினைவுகூர்ந்தார். அவர்தான் லாரா! இடதுகை பேட்ஸ்மேன்கள் லாராவின் ஷாட்களைப் பார்க்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் ஒரு பந்தை நல்ல கிரிக்கெட்டர், எப்படி வேண்டுமானாலும் ஆடலாம் என்பதற்கு உதாரணமாய் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ராபின் பீட்டர்சன் வீசிய ஒரே ஓவரில் 28 ரன்கள் அடித்தது- டெஸ்ட் அரங்கில் யாரும் நினைத்துப் பார்த்திடாத ஒன்று. அந்த ஓவரில் பெரும்பாலும் ஒரே மாதிரி பந்துகளை மட்டுமே பீட்டர்சன் வீச, ஆனால் லாராவோ கவர்ஸ், ஃபிளிக், மிட்-ஆன் சிக்சர், ஸ்டிரைட் டிரைவ் என மைதானத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரட்டினார்.
எப்போதும் ஆஸ்திரேலியர்கள் ஸ்லெட்ஜிங்கில் கில்லாடிகள். ஆனால் லாராவை ஸ்லெட்ஜிங் செய்தால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்! புயலுக்கு முன்னால் மரம் என்ன... கூரை என்ன... அனைத்தும் பறப்பது நிச்சயம். அதுபோல்தான் தனது பேட்டிங்கால் வாழ்நாளில் மறக்க முடியாத இன்னிங்ஸ்களை வெளிப்படுத்துவார் கரீபிய இளவரசர்.
2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியின்போது, டேரன் லேமன் பந்தில் சேவாக் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தது இந்திய ரசிகர்களால் என்றும் மறக்க முடியாது. அதே டேரன் லேமன் பந்தில் தொடர்ச்சியாக நான்கு சிக்சர்களைப் பறக்கவிட்டபின், இந்திய ரசிகர்களுக்கும் பிடித்த கிரிக்கெட் ஆட்டக்காரர் ஆனார் லாரா. அதேபோல் உலகக்கோப்பைத் தொடரின்போது தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் சிம்காக்ஸ் ஓவரில் 5 பவுண்டரிகள் அடித்து அவருக்கு மரண பயத்தை உண்டாக்கினார்.
டெஸ்ட் போட்டிகளில் இவரது 375 ரன்கள் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் ஹைடன் தகர்க்க, சில நாட்களிலேயே பதிலடியாய் 400 ரன்கள் அடித்து யாரும் தொட முடியாத சாதனையைப் படைத்தார். ஏதோ ஒன்றை மிஸ் செய்துவிட்டோம் அல்லவா. ஆம் லாராவின் 501 இன்னிங்ஸ்... அதைப்பற்றி பேசாமல் எவ்வாறு இதனை முடிவுக்குக் கொண்டு வர முடியும்...
துர்ஹம் - பர்மிங்ஹாம் அணிகளுக்கு இடையிலான கவுண்டி கிரிக்கெட் போட்டி. முதலில் பேட்டிங் செய்த துர்ஹம் அணியில் இங்கிலாந்து வீரர் ஜான் மோரிஸ் இரட்டை சதம் விளாச, எதிரில் நின்று கொண்டிருந்த லாராவோ எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக நிற்பார்.
சூறாவளி என்னைக்குடா சொல்லிட்டு வந்திருக்கு என்பது போல், பின்னர் களமிறங்கிய லாரா எதிரணி பந்துவீச்சாளர்களின் பந்துகளைப் துவம்சம் செய்தார். அதிரடியாக இரட்டை சதம், முச்சதம், நானூறு ரன்களைக் கடந்தும் ஆடினார். இவரது ஆட்டத்தைப் பார்த்த எதிரணி வீரர்களே இவரை ரசிக்கத் தொடங்கினர். முதல்தரக் கிரிக்கெட்டில் யாரும் படைத்திடாத சாதனையான 501 ரன்களை எடுத்தார். 427 பந்துகளை எதிர்கொண்ட லாரா 62 பவுண்டர்கள், 10 சிக்சர்கள் என 501 ரன்கள் எடுத்து அசாத்திய வீரராக மாறினார்.
லாராவுக்கு முன் யார் சிறப்பாக விளையாடினாலும், அவர்களோடு சிறப்பாக ஆட வேண்டும் என்ற எண்ணத்தோடு களமிறங்கி எதிரணியினரை வீழ்த்திக் காட்டுவார். அதுதான் லாராவிடம் பிடித்த ஒன்று. ஒரு அணி குழுவாக இணைந்து சிறப்பாக ஆடுகையில், ஒரு வீரர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவது பெரிய விஷயம் அல்ல. தொடர்ந்து தோல்விகளை அடையும்போதும் போர் வீரனாய் தனி ஆளாக அணியை மீட்கும் போராட்டத்தை வெளிப்படுத்தும் ஆட்டக்காரர் லாரா. இலங்கைக்கு எதிரான தொடரில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியைக் கண்டாலும், மூன்று போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட ரன்களை சேர்த்தார். அதுதான் லாராவை கொண்டாட வைக்கிறது. முரளிதரன், வார்னே போன்ற ஜாம்பவான்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள கிரிக்கெட் உலகமே விழிபிதுங்கி நின்றபோது, லாரா மட்டும் அவர்களைப் புரட்டி எடுத்தார். லாராவுக்கு பந்துவீச முரளிதரனும், வார்னேவும் விழிபிதுங்கி நின்றது வேறுகதை.
இன்றும் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் சதம் விளாசினாலோ, ஒரு கவர் டிரைவ் அடித்தாலோ, ஸ்வீப் ஷாட் அடித்தாலோ லாராவைப் போன்று இல்லையே என கிரிக்கெட் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுதான் லாரா உலக கிரிக்கெட்டில் செய்த சாதனை. விடைபெறும்போது கூட, தனது கடைசி பேச்சில் ரசிகர்களைப் பார்த்து, எனது ஆட்டம் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்ததா எனக் கேட்டார். அதற்கு ரசிகர்கள் என்ன பதில் கூறி இருப்பார்கள்! நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை...
லாரா தனது 50ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். பிறந்தநாள் வாழ்த்துகள் லாரா... ஆல்வேஸ் மிஸ் யூ!