நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை பென்ஸ்டோக்ஸ் 67 ரன்களுடனும், ஒல்லி போப் 18 ரன்களுடனும் தொடர்ந்தனர். ஆட்டம் தொங்கிய சிறிது நேரத்திலேயே போப் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் ஸ்டோக்ஸுடன் இணைந்த பட்லர் தனது அதிரடி ஆட்டத்தினால் அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தத் தொடங்கினார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த ஸ்டோக்ஸ் 91 ரன்களில் சௌதியிடம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த பட்லரும் 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 91 ரன்களையும், டென்லி 74 ரன்களையும் அடித்தனர். நியூசிலாந்து அணி சார்பில் டிம் சௌதி நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள நியூசிலாந்து அணி தொடக்க வீரரான டாம் லாதம் விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது வரை அந்த அணி ஒரு விக்கெட்டை இழந்து 35 ரன்களை சேர்த்துள்ளது. நியூசிலாந்து அணியில் ஜீட் ரவல் 10 ரன்களுடனும், கேப்டன் வில்லியம்சன் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: பகலிரவு டெஸ்ட்: பிளாக்கில் டிக்கெட் விற்க முயன்ற ஆறு பேர் கைது