வங்கதேச ஒருநாள் அணியின் பேட்டிங் ஆலோசகராக நைல் மெக்கன்சி செயல்பட்டு வருகிறார். இதனால் டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் ஆலோசகர் பதவிக்குத் தகுதியானவரை வங்கதேச கிரிக்கெட் வாரியம் தேடி வருகிறது.
இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நிஷாமுதீன் சவுத்ரி பேசுகையில், ''வங்கதேச அணியின் டெஸ்ட் பேட்டிங் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கரிடம் பேசி வருகிறோம். இதுவரை முடிவு எட்டப்படவில்லை.
எங்களைப் பொறுத்தவரையில் ஒருநாள் போட்டிகளுக்கு பேட்டிங் ஆலோசகராக செயல்படும் நைல் மெக்கன்சியே டெஸ்ட் போட்டிகளுக்கு ஆலோசகராகச் செயல்பட வேண்டும் என்று விருப்பப்படுகிறோம். ஆனால் அவர் மூன்று வகையான போட்டிகளுக்கு ஆலோசகராகச் செயல்பட ஆர்வமில்லை எனக் கூறிவிட்டார்.
சஞ்சய் பங்கர் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக 2014 முதல் 2019 வரை செயல்பட்டுள்ளார் என்பதை அறிவோம். அவர் டெஸ்ட் கிரிக்கெட் ஆலோசகராக வருவதற்கு விருப்பம் தெரிவித்தால், அவர் இந்த ஆண்டு ஜூன் முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 110 நாள்களுக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார். இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்படுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: இந்தியா விதைத்த வினையெல்லாம்... வங்கதேச வீரர் கூறும் பதில்!