இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர்மட்ட கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில் கரோனா வைரஸிற்கு இடையில் நடத்தப்படவுள்ள இந்திய அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம், இங்கிலாந்து அணியின் இந்திய சுற்றுப்பயணம், இந்திய உள்நாட்டு கிரிக்கெட் தொடர் ஆகியவைப் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இது குறித்து பிசிசிஐ அலுவலர் கூறுகையில், ''இந்தியா - இங்கிலாந்து தொடரை நடத்துவதற்கு பிசிசிஐ ஆர்வமாக உள்ளது. தொடருக்கு முன்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும், அந்தத் தொடரில் பிங்க் பால் டெஸ்ட் நடத்தவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆலோசனையில் அரசின் அனுமதிப்படி பயோ பாதுபாப்பு சூழலை மூன்று அல்லது நான்கு மைதானங்களில் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் பகல் - இரவு போட்டி நிச்சயம் அகமதாபாத் அல்லது கொல்கத்தாவில் நிச்சயம் நடக்கும். சரியான நேரத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும். இந்தியா - இங்கிலாந்து தொடர் நடப்பது உறுதியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக நிச்சயம் 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் நடக்கும். ஆஸ்திரேலிய அரசு அதில் ஏதும் தளர்வுகள் அளிக்கவில்லை. ஆனாலும் ஆஸ்திரேலிய அரசிடம் பிசிசிஐ சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் ஐபிஎல் தொடர் முழுவதுமே இந்திய வீரர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு தான் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியா செல்லவுள்ளதால் தனிமைப்படுத்தும் காலத்தில் தளர்வு அளிக்க வேண்டும் என கேட்டுள்ளோம்.
ஆனால் உள்நாட்டுத் தொடரைப் பொறுத்தவரை இன்னும் முடிவுகள் எட்டப்படவில்லை. ஏனென்றால் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் ஆடும் அனைத்தும் வீரர்களுக்கும் பயோ பப்புல் சூழலை உருவாக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான். ஆனால் சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
ரஞ்சி டிராபி தொடரில் அதிக அளவிலான அணிகள் ஈடுபட்டுள்ளதால், அனைத்து அணிகளும், வீரர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஜனவரி மாதத்தில் ரஞ்சி டிராபி தொடர் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.
இதையும் படிங்க: உள்ளூர் போட்டிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட கங்குலி!