இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. டி20 தொடரிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட இந்திய கேப்டன் விராட் கோலி இப்போட்டியின் மூலம் மீண்டும் அணிக்குத் திரும்பினார்.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மொமினுல் ஹாக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச தொடக்க வீரர்கள் ஷதாம் இஸ்லாம் 6, இம்ருல் கேயஸ் 6 ஆகியோர் அடுத்தடுத்த ஓவரில் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து முகமது மிதுனும் 13 ரன்னில் வெளியேறினார்.
இதனால் வங்கதேச அணி மிக விரைவாக மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் தடுமாறியது. அந்த அணி உணவு இடைவேளை வரை மூன்று விக்கெட் இழப்பிற்கு 63 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் மோமினுல் ஹாக் 22 ரன்னுடனும் முஷ்பிகுர் ரஹிம் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய பந்துவீச்சில் இஷாந்த் சர்மா, உமேஸ் யாதவ், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.