வங்கதேச கிரிக்கெட் வாரியத்தினால் நடத்தப்பட்ட வங்கதேச பிரீமியர் லீக் , டாக்கா பிரிமீயர் லீக்கில் விளையாடிய உள்நாட்டு வீரர்களுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டதன் அடிப்படையில், சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு சீனியர் வீரர்கள் பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து அந்த அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன் ஷாகிப் அல் ஹசன், மஹமதுல்லாஹ், முஷ்ஃபிகுர் ரஹிம் போன்ற சீனியர் வீரர்கள் நேரடியாக செய்தியாளர்களைச் சந்தித்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
அவர்கள் செய்தியாளர்களிடம், 'எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, நாங்கள் கிரிக்கெட்டில் ஈடுபட மாட்டோம். எங்களது போராட்டத்தில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியைச் சேர்க்கவில்லை. ஏனெனில், அவர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்' எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் வீரர்களின் வேலை நிறுத்தத்தின் காரணமாக, வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நலச்சங்கத் தலைவர் நைமூர் ரஹ்மான், தனது பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உலக சாதனையை சமன் செய்த கெவின் ஓ பிரெய்ன்!