தென் ஆப்பிரிக்காவின் பாட்செஃப்ஸ்ட்ரூமில் இன்று நடைபெற்ற யு19 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, வங்கதேசத்துடன் மோதியது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, வங்கதேச அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 47.2 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் 88, திலக் வர்மா 38 ரன்கள் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி தரப்பில் அவிஷேக் தாஸ் மூன்று, ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 41 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை எடுத்திருந்தது. இதனால், வங்கதேச அணியின் வெற்றிக்கு 54 பந்துகளில் 16 ரன்கள் தேவைபட்டபோது, மழை குறுக்கிட்டதால் சற்று நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.
கேப்டன் அக்பர் அலி 42 ரன்களுடனும், ரகிபுல் ஹசன் மூன்று ரன்களுடன் களத்திலிருந்தனர். இதைத்தொடர்ந்து, மழை நின்ற பின் வங்கதேச அணிக்கு டி-எல் (டக்வொர்த் லூயிஸ்) முறைப்படி இப்போட்டியில் வெற்றிபெற 30 பந்துகளில் ஏழு ரன்கள் எடுக்க வேண்டிய சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து, களமிறங்கிய அக்பர் அலி - ரகிபுல் ஹொசைன் ஜோடி சுஷாந்த் மிஷ்ரா வீசிய 42ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி உள்பட ஆறு ரன்களை சேர்த்ததால் ஆட்டம் சம நிலைக்கு வந்தது.
பின்னர், அதர்வா அங்கோலேக்கர் வீசிய 43ஆவது ஓவரின் முதல் பந்திலேயே ரகிபுல் ஹொசைன் வின்னிங் ஷாட் அடித்து 170 ரன்களை எட்டியது. இதனால், வங்கதேசத்திடம் இந்திய அணி இப்போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின்மூலம், வங்கதேச அணி யு19 உலகக் கோப்பை முதல்முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது.
இப்போட்டியில் வங்கதேச அணி சார்பில் தொடக்க வீரர் பர்விஸ் ஹொசைன் 47 ரன்களில் அவுட்டாக, கேப்டன் அக்பர் அலி 77 பந்துகளில் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 43 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இந்தியா சார்பில் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் நான்கு, சுஷாந்த் மிஷ்ரா இரண்டு, யஷஸ்வி ஜெய்ஷ்வால் ஒரு விக்கெட் எடுத்தனர்.
பானிப்பூரி ஏந்திய யஷஸ்வி ஜெய்ஷ்வாலின் கைகளில் இந்திய அணி உலகக் கோப்பை தூக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய ரசிகர்களின் கனவு நொருங்கியது. இருப்பினும் இந்தத் தொடரில் அவர் நான்கு அரைசதம், ஒரு சதம் உட்பட 400 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.