வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இதில் முன்னதாக நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று (அக்.25) நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி, களமிறங்கிய வங்கதேச அணிக்கு கேப்டன் தமிம் இக்பால் அதிரடியான தொடக்கத்தைத் தந்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிம், சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 49ஆவது அரைசதத்தைப் பதிவு செய்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த ஷகிப் அல் ஹசன், முஷ்பிகூர் ரஹிம், முகமதுல்லா ஆகியோரும் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் ஐம்பது ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்களை எடுத்தது.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக கேப்டன் தமிக் இக்பால், முஷ்பிகூர் ரஹிம், முகமதுல்லா ஆகியோர் தலா 64 ரன்களை எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்சாரி ஜோசப், ரேமான் ரீஃபர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் 44.2 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வங்கதேச அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்கதேச அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷ்பிகூர் ரஹிம் ஆட்டநாயகனாகவும், தொடர் முழுவதும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷகிப் அல் ஹசன் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு ஷகிப் அல் ஹசன் பங்கேற்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஸ்பின் பவுலிங்கை ஏறி வந்து அடித்தால் பாதி மீசையை எடுத்துக்கொள்கிறேன் - புஜாராவிற்கு அஸ்வின் சவால்!