சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. அதில் ஓராண்டிற்குப் பிறகு ரோஹித் சர்மாவும், அறிமுக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இப்போட்டியின் நான்காம் நடுவராக ஆஸ்திரேலியவைச் சேர்ந்த பெண் நடுவர் கிளைர் போலோசக் செயல்படவுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆடவர் டெஸ்ட் போட்டியின் நடுவராகச் செயல்படும் முதல் பெண்மணி என்ற வரலாற்றுச் சாதனையையும் போலோசக் படைக்கவுள்ளார்.
முன்னதாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிரிக்கெட் லீக் டிவிஷன் 2 தொடரின் இறுதிப் போட்டியில் கிளைர் போலோசக் செயல்பட்டிருந்தார். சர்வதேச ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நடுவராகப் பொறுப்பு வகித்த முதல் பெண் என்ற வரலாற்றுச் சாதனையையும் இவர் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'திட்டமிட்டப்படி ஆஸ்திரேலியன் ஓபன் நடைபெறும்' - கிரேக் டைலி