ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நவ.27ஆம் தேதி தொடங்கவுள்ளதால், இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடையே பேசிய ஸ்டோய்னிஸ், “இந்திய அணியை வீழ்த்துவதற்காக எங்களிடம் சில உத்திகள் உள்ளன. அதேபோல் விராட் கோலியைக் கையாளுவதற்கும் சில திட்டங்கள் உள்ளன. அது கடந்த காலங்களில் எங்களுக்கு உதவியது.
ஆனால் சில நேரங்களில் எங்களுக்கு அது பலனளிக்கவில்லை. அதனால் அவர் எங்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடியுள்ளார். மேலும் விராட் கோலி தலைசிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. அவர் அனைத்து அணிகளுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படக்கூடியவர்.
அதனால் இந்தத் தொடரின்போது விராட் கோலியைக் கையாளுவதற்கு கூடுதல் கவனம் தேவை என நினைக்கிறேன். அவரது குழந்தையின் பிறப்புக்காக அவர் வீட்டிற்கு திரும்பவுள்ளது சரியான முடிவு” என்று தெரிவிதார்.
முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இரண்டு முறை விராட் கோலியின் விக்கெட்டைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :காணொலி கூட்டரங்கின் மூலம் நடைபெறும் ஃபிஃபா விருது நிகழ்ச்சி!