தனது அசாத்திய பேட்டிங் திறமையால் ஆஸ்திரேலிய அணியின் 132ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதி அணிக்குள் பிரவேசம் செய்தவர் டேவிட் ஆண்ட்ரூ வார்னர். முதல் தர கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் கூட பங்கேற்காத வார்னர், 2009ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக களமிறங்கினார்.
அப்போட்டியில் களமிறங்கியது மட்டுமில்லாமல் 43 பந்துகளில் ஆறு சிக்சர்கள், ஏழு பவுண்டரிகள் என 89 ரன்களை வெளுத்து வாங்கி தனது முதல் மேட்சிலேயே ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார். அன்றிலிருந்து ஆஸ்திரேலிய டி20, ஒருநாள் அணிகளின் நிரந்திர வீரராக மாறினார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிவந்த இவர், அதேஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் களமிறங்கி முதல் போட்டியிலேயே அரைசதமடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.
பின் இந்தியன் பிரிமீயர் லீக் போட்டிகளுக்காக 2009ஆம் ஆண்டு டெல்லி டேர்டவில்ஸ் அணிக்காக ஒப்பந்தமானார். ஆரம்பத்தில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார்.
அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது டெஸ்ட் பயணத்தை தொடங்க ஆரம்பித்த வார்னர் தனது மற்றொரு முகத்தையும் கிரிக்கெட் உலகிற்கு காட்டி அசத்தினார். டெஸ்டிலும் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதத்தை பதிவு செய்ததோடு 180 ரன்களை விளாசி மீண்டும் தான் ஒரு அதிரடி நாயகன் என்று சொல்லாமல் சொன்னார்.
அதன் பின் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து தொடரில் வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணியிலிருந்து வார்னரை கழற்றிவிட்டனர். அதேபோல் அந்த ஆண்டு ஐபிஎல் தொடரும் வார்னருக்கு சரியாக அமையாததால் டெல்லி டேர்டெவில்ஸ் அணியிலிருந்தும் அவர் கழற்றிவிடப்பட்டார்.
அதன் பின் ஓராண்டுகளாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்த வார்னர் மீண்டும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு 2013-14 ஆண்டுkகான ஆஸ்திரேலிய அணியில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்தார். அவர் அந்த சீசனில் ஐந்து போட்டிகளில் பங்கேற்று இரண்டு சதம், இரண்டு அரைசதம் என மொத்தம் 523 ரன்களை சேர்த்தார்.
2014ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் டெல்லி அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வார்னரை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 5.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. பின்னர் அவர் ஹைதராபாத் அணிக்காக ஆடிய ஆட்டம் தான் வெறித்தனமாக இருந்தது.
2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின்போது ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த வார்னர் ஆஸ்திரேலிய அணி கோப்பை வெல்ல உறுதுணையாக இருந்தார். அந்தத் தொடரில் அவர் ஆஸ்திரேலிய அணியில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தினார்.
பின்னர் அடுத்த ஆண்டே ஐபில் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட வார்னர், அந்தத் தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் தனது அதிரடியை காட்டியது மட்டுமில்லாமல் 2016ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கோப்பையையும் வென்றெடுத்தார்..
அதன் பின் 2018ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் ஸ்மித், பான்கிராஃப்டுடன் சிக்கிய வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. தடை முடிந்தபின் இந்தாண்டு மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வார்னர் இந்த சீசனுக்கான அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு நிறத் தொப்பியை வென்றார். அவர் இந்த ஐபிஎல் சீசனில் 692 ரன்களை விளாசி தான் யார் என்பதை மீண்டும் கிரிக்கெட்டில் நிரூபித்தார்.
அதன் பின் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 ரன்களை மட்டுமே எடுத்து கடும் விமர்சனத்திற்குள்ளானார். அதனைத் தொடர்ந்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.
குறிப்பாக அவரின் 33ஆவது பிறந்த நாளான இன்று இலங்கை அணியுடனான முதலாவது டி20 போட்டியில் களமிறங்கிய வார்னர் சர்வதேச டி20 அரங்கில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்து அனைவரையும் வியக்கவைத்தார். மேலும் இன்றையப் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக ஆட்டநாயகன் விருதையும் பெற்றார் வார்னர்.
இதுவரை டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணிக்காக, 116 ஒருநாள் போட்டிகளில் 17 சதங்கள், 20 அரைசதங்கள் என 4990 ரன்களையும், 71 டி20 போட்டிகளில் ஒரு சதம், 13 அரைசதங்கள் என 1892 ரன்களையும், 79 டெஸ்ட் போட்டிகளில் ஒரு இரட்டை சதம், 21 சதங்கள், 30 அரைசதங்கள் என 6458 ரன்களையும் விளாசியுள்ளார்.
இதுபோன்று பல்வேறு சாதனைகளை நிகழ்த்தவுள்ள வார்னருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...#HappyBirthdayWarner