ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கிடையில் இவ்விரு அணிகலுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி கான்பெர்ராவில் நாளை நடைபெறவுள்ளது. ஏற்கெனவே ஆஸ்திரேலியா அணி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதனால் நாளைய போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றியையாவது பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு ஆஸ்திரேலிய தொடரை விளையாடுவதால் பந்துவீச்சாளர்களின் பணிச்சுமையானது அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஐயர், "தொடர்ச்சியான டி20 போட்டிகளில் விளையாடிவிட்டு, நேரடியாக ஒருநாள் போட்டிகளில் 10 ஓவர்களை வீசுவதும், 50 ஓவர்கள் பீல்டிங் செய்வதும் பந்துவீச்சாளர்களுக்கு மிக கடினமான ஒன்று. எனவே அவர்களைப் பொறுத்துவரையில் இது அவ்வளவு எளிதான விஷயமல்ல.
மேலும் அது கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலேயே தெரிந்தது. அப்போட்டிகளில் எங்களுக்கு இலக்காக 300 ரன்களுக்கு மேல் இருந்தன. ஆனால் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினாலும், பந்துவீச்சாளர்கள் தங்களது பணியை சரிவர செய்ய முடியவில்லை.
இதனை நான் தோல்விக்கான காரணமாக கூறவில்லை. ஆனால் இத்தொடரில் பந்துவீச்சாளர்களுக்கான பணிச்சுமையானது அதிகரித்துள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகள் விளையாடியவுடனே, தனிமைப்படுத்தப்பட்டு, தற்போது மீண்டும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறோம். இதனால் ஓவ்வொரு வீரருடைய மனநிலையும், உடல்நிலையும் சோர்வடைந்துள்ளது.
இருப்பினும் இனி வரும் போட்டிகளில் எங்களுடைய முழுத்திறனையும் வெளிப்படுத்துவோம் என நம்புகிறேன். அதனால் நாளைய போட்டியிலும் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்று தெரிவித்தூள்ளார்.
இதையும் படிங்க: தொடர் வெற்றி... திடீர் கரோனா... என்ன செய்யப்போகிறார் லீவஸ் ஹேமில்டன்?