இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (நவ.27) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்காக இரு அணி கிரிக்கெட் வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஆஸி., அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர், இந்தியா - ஆஸ்திரேலியா தொடரின் போது ஸ்லெட்ஜிங்கிற்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய லங்கர், "ஆஸ்திரேலியாவில் பிற அணிகள் சுற்றுப்பயணம் மெற்கொள்ளும்போது, அந்நாட்டு மக்கள் சற்று பதற்றத்துடன் இருப்பதாகக் கருத்துகள் நிலவி வருகின்றன. ஆனால் அது ஏன் என்பது குறித்துத் தெரியவில்லை. ஏனெனில் நாங்கள் தற்போது உலகின் மிகச்சிறந்த வீரர்களுடன் விளையாடவுள்ளோம்.
நீங்கள் ஷேன் வார்னே, க்ளென் மெக்ராத் அல்லது ஸ்டீவ் வாக், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங்கிற்கு எதிராக விளையாடும்போது இந்த விமர்சனங்களை முன்வைத்தால் அதனை நான் ஒப்புகொள்வேன்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எங்கள் அணியைச் சேர்ந்த எவரும் களத்திலோ அல்லது வெளியேவோ எந்த ஸ்லெட்ஜிங்கிலும் ஈடுபடுவது கிடையாது. மேலும் இந்தியாவிற்கு எதிராக விளையாடுவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஏனெனில் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இத்தொடரில் விளையாடவுள்ளதால் ஸ்லெட்ஜிங்கிற்கு இங்கு இடமிருக்காது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ‘அனைத்துத் தாய்மார்களுக்கும்...!’ - சானியா மிர்சாவின் உருக்கமான கடிதம்