ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நவம்பர் 27ஆம் தேதி சிட்னியில் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
பயிற்சிகளுக்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, "இத்தொடர் நிச்சயம் சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும். ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பது மிகவும் சவாலான ஒன்றாகும். ஒவ்வொரு வீரரும் சிறந்த அணிக்கெதிராக விளையாடுவதை விரும்புவார்கள். அதுபோன்றுதான் ஆஸ்திரேலியா போன்ற சிறந்த அணிக்கெதிராக விளையாடும் சவாலை எதிர்கொள்ள தயாராகவுள்ளேன்.
மேலும் இந்தத் தொடரில் அனைத்துவிதமான போட்டிகளிலும் நாங்கள் விளையாடவுள்ளோம். அதிலும் குறிப்பாக பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் விளையாடுகிறோம். இது நாங்கள் பங்கேற்கும் முதல் வெளிநாட்டு பகலிரவு ஆட்டமாகும். அதனால் இப்போட்டி குறித்தான எதிர்பார்ப்பு எங்களிடத்திலும் அதிகரித்துள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஆஸி. தொடர்: சுழற்சி முறையில் பும்ரா, முகமது ஷமியை பயன்படுத்த திட்டம்