ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் மெல்போர்னில் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜோ பர்ன்ஸ் ரன் ஏதுமின்றியும், மேத்யூ வேட் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த மார்னஸ் லபுசாக்னேவும் 48 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து வந்த ஆஸ்திரேலிய வீரர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா முதல் இன்னிங்ஸ்
பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கும் ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் தொடக்க வீரர் மயாங்க் அகர்வால், ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ரஹானே - ரவீந்திர ஜடேஜா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரஹானே தனது 12ஆவது டெஸ்ட் சதத்தையும், ஜடேஜா அரைசதத்தையும் பதிவுசெய்தனர்.
இதனால் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்களை எடுத்து, முதல் இன்னிங்ஸை நிறைவுசெய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 112 ரன்களையும், ஜடேஜா 57 ரன்களையும் எடுத்தனர்.
2ஆவது இன்னிங்ஸிலும் தடுமாறிய ஆஸி.,
தொடர்ந்து, 131 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவேளையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் காமரூன் கிரீன் - பாட் கம்மின்ஸ் இணையின் சிறப்பான ஆட்டத்தினால் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றது. இதனால் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இரண்டாவது இன்னிங்ஸை நிறைவுசெய்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு இலக்காக 70 ரன்களையும் நிர்ணயித்தது.
இந்தியா அபார வெற்றி
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் மயாங்க் அகர்வால் 5 ரன்களிலும், புஜாரா மூன்று ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரஹானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இதன்மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ரொனால்டோ, லெவாண்டோவ்ஸ்கிக்கு குளோப் சாக்கர் விருது!