இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மேத்யூ வேட் அரைசதமடித்து, அணிக்கு அடித்தளமிட்டார். அவரைத் தொடர்ந்து வந்த ஸ்டீவ் ஸ்மித்தும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார்.
இதன் மூலன் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களை எடுத்தது. ஆஸி., அணி தரப்பில் மேத்யூ வேட் 58 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் நடராஜன் தங்கராசு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் - ஷிகர் தவான் இணை சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இதில் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கே.எல். ராகுல் பெவிலியன் திரும்ப, மறுமுனையில் அசத்திவந்த ஷிகர் தவான் தனது 11ஆவது டி20 அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
பின்னர் 52 ரன்கள் எடுத்திருந்த தவான், ஸாம்பாவின் பந்துவீச்சில் ஸ்வெப்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவருக்கு அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சனும் 15 ரன்களோடு நடையைக் கட்டினார்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி, எதிரணி பந்துவீச்சை பவுண்டரிகளாக விளாசி அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தினார். ஆனால் 40 ரன்கள் எடுத்திருந்த கோலியும் விக்கெட்டை இழக்க, இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இறுதியாக ஹர்திக் பாண்டியா - ஸ்ரேயாஸ் ஐயர் இணை சூழ்நிலைக்கேற்ப விளையாடியதால், 19.4 ஓவர்களில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதையும் படிங்க: டிம் சௌதி, வாக்னர் பந்துவீச்சில் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ்: நியூ., இன்னிங்ஸ் வெற்றி!