ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மேத்யூ வேட் நியமிக்கப்பட்டார். இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மேத்யூ வேட் - டி ஆர்சி ஷார்ட் இணை அதிரடியான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதன்மூலம் முதல் ஆறு ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 59 ரன்களை குவித்து வலுவான நிலையில் இருந்தது.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ வேட் அரைசதம் கடந்து அசத்தினார். இதற்கிடையில் நடராஜன் வீசிய முதல் ஓவரில் டி ஆர்சி ஷார்ட் சிக்கர் விளாச முற்பட்டு ஸ்ரேயாஸ் ஐயரிடன் கோட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மேத்யூ வேடும் 58 ரன்களில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
அவர்களைத் தொடர்ந்து வந்த ஸ்டீவ் ஸ்மித் - மேக்ஸ்வெல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் மேக்ஸ்வெல் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஸ்மித் 46 ரன்களில் வெளியேறி அரைசதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.
அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஹென்ட்ரிக்ஸ் - ஸ்டோய்னிஸ் இணை பவுண்டரிகளை விளாசி இமாலய இலக்கை நிர்ணயிக்க உதவினர். இதன் மூலம் 20 ஓவரகள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களை குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூ வேட் 58 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் நடராஜன் தங்கராசு இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையும் படிங்க:‘ஜடேஜாவை குறைத்து மதிப்பிட்டுள்ளனர்’- முகமது கைஃப்