இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமானவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்.
தோனிக்கே உரித்தான பாடி லாங்குவேஜ், மேனரிசம், பேட்டிங் ஸ்டைல், அவரின் சிறுசிறு அசைவுகள் என அத்தனையும் படத்தில் கடத்தி தோனியாகவே வாழ்ந்திருந்தார். ரசிகர்கள் பெரும்பாலும் அவரைத் தோனியாகவே திரையில் பார்த்து ரசித்தனர்.
இந்த நிலையில் 34 வயதான இவர், மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இவரது திடீர் மரணம் பாலிவுட் வட்டாரங்கள் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் சுஷாந்த் சிங் மரணத்திற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில் அவர், “என்னால் சுஷாந்த் சிங் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவரது மரணம் மிகவும் துயரமானது.
தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி படத்தை பார்க்கும்போது சில சமயங்களில் நாம் தோனியை பார்க்கிறோமா அல்லது சுஷாந்த் சிங் ராஜ்புத்தை பார்க்கிறோமா என்பதை மறந்துவிடுவோம். அந்த அளவிற்கு அவர் அந்த படத்தில் அற்புதமாக நடித்திருந்தார். அவர் இல்லாத இந்த உலகம் தற்போது ஏழ்மையானது” என குறிப்பிட்டிருந்தார்.