வெஸ்ட் இண்டீஸில் பிறந்து இங்கிலாந்து அணிக்கு விளையாடியது மட்டுமல்லாமல், இங்கிலாந்து அணி முதன் முறையாக உலகக்கோப்பை வெல்வதற்கும் முக்கியக் காரணமாக இருந்தவர் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர்.
கரோனா வைரஸ் தொற்றினால் இங்கிலாந்தில் ஜூலை மாதம் வரை எந்தவித கிரிக்கெட் போட்டிகளுக்கும் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் வானொலி நிகழ்ச்சிக்கு ஆர்ச்சர் அளித்துள்ள பேட்டியில், தனக்கு வழங்கப்பட்ட உலகக்கோப்பைப் பதக்கத்தை தான் தொலைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ஆர்ச்சர், "நான் என்னுடைய பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டிற்குக் குடிபெயர்ந்துள்ளேன். அப்போது என்னுடைய அனைத்து உடமைகளையும் நான் புதிய வீட்டிற்கு மாற்றியபோதுதான் தெரிந்தது எனது உலகக்கோப்பை பதக்கத்தை காணவில்லை என்பது.
இதனையடுத்து என்னுடைய பழைய வீட்டிற்குச் சென்று தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இருப்பினும் அது என்னுடைய வீட்டில்தான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும் அதனைத் தேடும் முயற்சியையும் நான் கைவிடப்போவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக விளையாடிவரும் ஜோஃப்ரா ஆர்ச்சர், 22 அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் விளையாடி, 55 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலுல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் இவர் கடந்த ஐபிஎல் தொடரில் 26 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க:வீட்டிலிருந்து யாரும் வெளியே வராதீர்கள் - சச்சின்!