ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமானவர் முகமது ஷாசாத். இவர் தனது அதிரடி ஆட்டத்திற்கும் தனது உடல் உருவத்திற்கும் பெயர்போனவர். உலகக்கோப்பை தொடரிலிருந்து உடல் தகுதி காரணமாக பாதியிலேயே நீக்கப்பட்டார்.
ஆனால் அவர், முழு உடல் தகுதியுடன் இருக்கும் தன்னை வேண்டுமென்றே அணியிலிருந்து நீக்கியதாகவும் வாரியத்தில் உள்ளவர்கள் தனக்கு எதிராக செயல்படுவதாகவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மீது பரபரப்பு புகார் கூறியிருந்தார். அவருடைய புகார் உலகக் கிரிக்கெட் அரங்கையே அதிரவைத்தது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முகமது ஷாசாத்தின் அனைத்து விதமான ஒப்பந்தங்களையும் காலவரையின்றி நீக்க உத்தரவிட்டுள்ளது. அணி வீரர்கள் வெளிநாடு சென்றால் கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியைப் பெற வெண்டுமென்ற விதியை அவர் மீறியதாகக் கூறி அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவால் முகமது ஷாசாத் இனி எந்தவிதமான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.