கரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் நலனுக்கு உத்தரவு என ஏற்றுக்கொண்டாலும், சிறு வணிகர்கள், தினக்கூலிகள், ஆதரவற்றோர் ஆகியோரின் நிலை பற்றி பல்வேறு தரப்பினரும் கவலையடைந்துள்ளனர். இதனிடையே மேற்கு வங்க மாநில அரசு ஆதரவற்றோரை அரசு பள்ளிகளில் தங்க வைத்துள்ளது.
இந்நிலையில் அவர்களுக்கு உணவளிக்கும் வகையில் லால் பாபா அரிசி ஆலையுடன் இணைந்து ரூ. 50 லட்சம் மதிப்பிலான அரிசியை வழங்குவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே பெங்கால் நகரத்தை இதுபோன்ற நிலையில் காண்பேன் என எப்போதும் நினைத்ததில்லை என அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த அசாதாரணமான சூழலை சமாளிப்பதற்கு பணக்காரர்கள் முன்வர வேண்டும் என குரலெழுப்பியுள்ளார். இந்தச் செயல் பல முன்னாள், இந்நாள் கிரிக்கெட்டர்களையும் உதவுவதற்கு ஊக்கமளித்துள்ளது.
மேலும் அரசுக்கு எவ்வித உதவியையும் இந்த நேரத்தில் அளிப்பதற்கு நாங்கள் தயாராகவே இருப்போம் எனக் கூறியுள்ளார். கங்குலியைத் தொடர்ந்து பெங்கால் கிரிக்கெட் சங்கத்தலைவரும், ஜக்மோகன் டால்மியாவின் மகனுமான அவிஷேக் டால்மியா ரூ. 25 லட்சத்தை மத்திய அரசு நிவாரணத்திற்கும், ரூ. 5 லட்சத்தை மாநில அரசின் நிவாரணத்திற்கும் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: ‘ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்பதற்கு என்னிடம் பதில் இல்லை!’ - கங்குலி