கிரிக்கெட் விளையாடுட தொடங்கப்பட்ட காலம் முதல் கிரிக்கெட் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுதான் இருக்கிறது. முதலில் டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட் , டி20 கிரிக்கெட், டி10 கிரிக்கெட், தற்போது 100 பால் கிரிக்கெட் என பரிணாம வளர்ச்சியடைந்தே வருகிறது.
சில நாட்களுக்கு முன்னதாக ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கூடி ஒரே ஆலோசனையில் ஈடுபட்டது. அது என்னவென்றால், 2023ஆம் ஆண்டு நடக்கவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒருபகுதியாக நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்பது தான். இதற்கு காரணங்களாக டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கான செலவுகள், உள்நாட்டு கிரிக்கெட் லீக்-களின் அதிகரிப்பு, டி20 கிரிக்கெட் லீக்-களின் அதிகரிப்பு ஆகியவை கூறப்பட்டுள்ளன.
இதற்கு இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாது ஆகிய கிரிக்கெட் வாரியங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆனால் நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் என்றால் எப்படி ஆடப்படும், அதில் செயல்படுத்தப்படவுள்ள மாற்றங்கள் என்ன என்பது குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், அதன் வடிவம் வெளியாகியுள்ளது.
நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் முன்னதாக 2017ஆம் ஆண்டே தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் விளையாடியுள்ளன.
அதில் பின்பற்றப்பட்ட விதிகள்:
- ஒவ்வொரு நாள் ஆட்டமும் ஆறரை மணி நேரம் விளையாடப்படும். அதாவது ஐந்துநாள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடப்படுவதை விட அரை மணி நேரம் அதிகமாகவே விளையாடப்படும். அதேபோல் 90 ஓவர்களுக்கு பதிலாக ஒவ்வொரு நாளும் 98 ஓவர்கள் வீசப்படும்.
- ஒவ்வொரு நாளும் முதல் இரண்டு செஷன்களும் 2 மணி நேரங்களுக்கு விளையாடப்படுகின்றன. அதற்கு பதிலாக இரண்டு செஷன்களிலும் 15 நிமிடங்கள் அதிகரித்து இரண்டு மணிநேரம் 15 நிமிடங்கள் விளையாடப்படும்.
- இரண்டாவது செஷனுக்கு பின் 40 நிமிடங்கள் உணவு இடைவேளை அனுமதிக்கப்படும்.
- ஒருநாளில் குறிப்பிட்ட நேரம் விளையாடத் தடை ஏற்பட்டால், அதனை சரிசெய்ய அடுத்தடுத்த நாள்களில் ஈடுசெய்ய எவ்வித முன்னேற்பாடுகளும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது.
- ஐந்துநாள் போட்டியில் 200 ரன்களுக்கு அதிகமான முன்னிலை இருந்தால் ஃபாலோ- ஆன் வழங்கலாம் என்ற விதிமுறை, நான்கு நாள் போட்டிகளுக்கு 150 ரன்களாக குறைக்கப்படும்.
- கடந்த இரண்டு வருடங்களில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 40% போட்டிகளே 5ஆம் நாள் வரை விளையாடப்பட்டுள்ளது. 2018-19ஆம் ஆண்டுகளில் 60% போட்டிகள் நான்கு நாள்களிலேயே முடிவடைந்துள்ளது. 2019ஆம் ஆண்டில் நடந்த 39 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு போட்டி மட்டுமே 400 ஓவர்களுக்கு மேல் வீசப்பட்டுள்ளது. அந்த 39 டெஸ்ட் போட்டிகளில் 13 டெஸ்ட் போட்டிகள் ஐந்தாம் நாள் வரை சென்றாலும், அதில் நான்கு போட்டிகள் மட்டுமே டிராவில் முடிவடைந்துள்ளன.
*என் நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் தேவை?
டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகள் நான்கு நாள் டெஸ்ட் போட்டி ஃபார்மெட்டிற்கு ஆதரவளித்து ஏற்றுக்கொண்டு விளையாடத் தொடங்கினால், அது ஐசிசி-க்கும், அந்தந்த கிரிக்கெட் வாரியங்களுக்கும் மிகப்பெரிய நன்மையை ஏற்படுத்தும். நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளை ஆடுவதன் மூலம் கிட்டதட்ட 2023ஆம் ஆண்டிலிருந்து 2031ஆம் ஆண்டு வரை 335 நாள்கள் காலியாக இருக்கும் என நம்பப்படுகிறது. அவ்வாறு காலியாக இருக்கும் நாள்களில் மற்ற டெஸ்ட் போட்டிகளுக்கும், தொடர்களுக்கும் பயன்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
*நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் அதிகமான போட்டிகளுக்கு முடிவுகளை ஏற்படுத்துமா?
டெஸ்ட் போட்டிகள் நான்கு நாள்களாகக் குறைக்கப்பட்டால், நான்கு நாள்களில் போட்டியில் முடிவினை ஏற்படுத்தும் வகையில் ஆடுகள தயாரிப்பாளர் ஆடுகளத்தை தயார் செய்யவேண்டும். அது டெஸ்ட் போட்டிகளைப் பார்ப்பதற்கு எவ்வாறு இருக்கும் என்பதை பரிசோதித்து பார்த்தால் தெரியவரும்.
* வீரர்களுக்கான ஓய்வுக்கு நேரம் கிடைக்குமா?
டெஸ்ட் போட்டிகள் நான்கு நாள்களாகக் குறைக்கப்பட்டால், வீரர்களுக்கு அதிகமான ஓய்வுகள் கிடைப்பதோடு, காயம் ஏற்படுவதும் குறையும். அதாவது ஒரு அணி ஒரு ஆண்டில் 15 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் என்றால், அதற்கு 75 நாள்கள் தேவைப்படும். அதுவே டெஸ்ட் போட்டிகள் நான்கு நாள்களாகக் குறைக்கப்படும் என்றால் 60 நாள்களில் ஆட்டம் முடிவடைவதோடு, வீரர்களுக்கு 15 நாள்கள் ஓய்வும் கிடைக்கும். ஆனால் அந்த 15 நாள்களில் கிரிக்கெட் வாரியங்கள் வேறு போட்டிகளுக்கு திட்டமிடாமல் இருப்பது, அந்தந்த கிரிக்கெட் வாரியங்களைப் பொறுத்தது.
* எதிர்ப்புகள்:
டெஸ்ட் போட்டிகளின் நாள்களை நான்காகக் குறைப்பதற்கு ஆலோசனை செய்யப்பட்ட செய்துஇ வெளியானதில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜாம்பவான் வீரர்களான மெக்ராத், பாண்டிங், ஆஸ்திரேலியாவின் இன்றைய வீரர்கள் ட்ராவிஸ் ஹெட், நாதன் லயன், டிம் பெய்ன், நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் வாக்னர் ஆகியோர் கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர்.
* ஏன் நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் ஆடக்கூடாது?
2019ஆம் ஆண்டில் ஆடப்பட்ட டெஸ்ட் போட்டிகளில் பெரும்பாலான போட்டிகள் நான்கு நாள்களில் முடிவை எட்டப்பட்டுவிட்டன. ஆனால் இந்த பேச்சுகள் பலம் வாய்ந்த அணியுடன் பலம் குறைந்த அணி ஆடப்படும் போது நான்கு நாள்களுக்குள் முடிவு எட்டப்படும். ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் ஆடினால் ஆட்டம் நிச்சயம் ஐந்தாவது நாளுக்கு செல்லும்.
இந்தியாவைப் பொறுத்தவரை எப்போதும் புதிய விஷயங்களை ஏற்பதில் தாமதித்தே வந்துள்ளோம். பிசிசிஐ தலைவர் கங்குலி, இந்திய கேப்டன் விராட் கோலி, முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், கவுதம் கம்பீர் ஆகியோர் எதிர்த்துள்ளனர். இதனால் நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் குறித்த யோசனை, அதன் செயல் வடிவம் ஆகியவற்றோடு மீண்டும் ஐசிசி பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதனைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இதையும் படிங்க: 2019 கிரிக்கெட்: சாதனைகளும்... வேதனைகளும்...!