இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினால் இந்திய அணியைத் தேர்வு செய்யும் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும், மும்பை அணியின் முன்னாள் முதன்மை தேர்வுக்குழு தலைவருமான அஜித் அகர்கர், தற்போது இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக நேற்று தெரிவித்தார்.
ஏற்கனவே இப்பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த லக்ஷ்மன் சிவராமகிரிஷ்ணன், பரோடாவைச் சேர்ந்த நயன் மொங்கியா, ஹரியானாவின் சேட்டன் சர்மா, மத்திய பிரதேசத்தின் ராஜேஷ் ஷவான் ஆகியோர் விண்ணப்பித்துள்ள நிலையில் தற்போது அந்த பட்டியலில் அஜித் அகர்கர் இடம்பிடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
மேலும் இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அஜித் இந்த பதவிக்கு விண்ணப்பித்துள்ளது அனைவருக்கு மகிழ்ச்சியளிக்கும். மேலும் இதுவரை சிவா தான் தலைவராக இருப்பார் என்று நினைத்தவர்கள் கூட தற்போது அஜித்தின் வருகையினால் சற்று சிந்திப்பார்கள். குறுகிய பட்டியலில் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியானது சுவாரஸ்யமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
42வயதாகும் அஜித் அகர்கர், இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 191 ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்று 349 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும் 23 ஒருநாள் போட்டிகளிலேயே அதிவேகமாக ஐம்பது விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்திருந்தவர் எனபது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இந்தியா ஏ அணியை வீழ்த்திய நியூசிலாந்து ஏ!