ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் பிக் பேஷ் டி20 கிரிக்கெட் தொடர் மிகவும் பிரபலமான ஒன்றாகும். மொத்தம் எட்டு ஆடவர் அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இதையடுத்து மகளிர் கிரிக்கெட் அணிக்கென்று கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தனியாக தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதிலும் ஆண்கள் அணியைப் போன்று எட்டு அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில் இந்தாண்டுக்கான பிக் பேஷ் மகளிர் டி20 தொடர் இம்மாதம் 18ஆம் தேதி தொடங்குகிறது. அதில் பங்கேற்கவுள்ள அணிகள் தங்களின் வீராங்கனைகளைத் தயார் செய்து வருகிறது. அந்த வகையில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாட 16 வயது இளம் வயது வீராங்கனை டார்சி பிரவுன் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கப்புண்டா நகரைச் சேர்ந்த இந்த வீராங்கனை ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஆவார். அவர் 19 வயதுக்குட்பட்ட ஆஸ்திரேலிய அணியிலும் இடம் பெற்றிருந்தார். மேலும் தற்போது அடிலெய்டு அணிக்குத் தேர்வு செய்யப்பட்டதன் மூலம் அந்த அணியில் மிக இளம் வயதில் இடம்பெற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையையும் டார்சி பிரவுன் அடைந்துள்ளார்.
அடிலெய்டு அணி வரும் புதன்கிழமை மெல்போர்ன் சென்று ஐசிசி மகளிர் முன்னேற்ற அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து வரும் 18ஆம் தேதி பிக் பேஷ் டி20 தொடரில் அந்த அணி கேரன் ரோல்டன் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறது.
இதையும் படிங்க: