இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் அவ்வபோது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் வீரர்கள் குறித்து கருத்துகள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இது மட்டுமின்றி சில ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் சமயத்திலும் இவர் இது போன்ற கருத்துகளை வெளியிடுவதுண்டு.
அந்த வகையில் பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று மைக்கேல் வாகன் கூறியதாக சிலவற்றை வெளியிட்டுள்ளது. அதில் மைக்கேல் வாகன், 'ஐசிசி தரவரிசை குறித்து என்னால் மிகவும் உறுதியாகக் கூற முடியும். அவை ஒரு குப்பை என நான் நினைக்கிறேன்' எனக் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், நியூசிலாந்து அணி கடந்த இரண்டு ஆண்டுகளில் எவ்வாறு பல தொடர்களை வென்றது என எனக்கு தெரியவில்லை. அது மட்டுமல்லாது கடந்த நான்கு ஆண்டுகளாக டெஸ்ட் தொடர்களில் அதிலும் குறிப்பாக வெளிநாட்டு மைதானங்களில் திணறிவரும் இங்கிலாந்து அணி தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து ஆஷஸ் தொடரை டிரா செய்தது. ஆனால் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரை மட்டுமே கைப்பற்றியது.
இதே வேளையில் நியூசிலாந்து அணி இரண்டாவது தலைசிறந்த டெஸ்ட் அணியாக தரவரிசையில் உள்ளது. ஆனால் என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணியே எப்போதும் சிறந்தது எனக் கூறினார். எனவே இந்த தரவரிசைப் பட்டியலில் நியூலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடங்கள் குழப்பமாக உள்ளது என நினைக்கிறேன்.
அவர் இவ்வாறு கூறக் காரணம் தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, முதல் டெஸ்ட் போட்டியில் 296 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
மேலும், தற்போது பலமான அணியாக இருக்கும் ஆஸ்திரேலிய அணி, தரவரிசைப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பது சம்பந்தமில்லாத ஒன்றாக உள்ளது என்றும் குறிப்பிட்ட வாகன், ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணியால் மட்டுமே அச்சுறுத்தல் தர முடியும். தற்போது உள்ள அணிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளே சிறந்த டெஸ்ட் அணிகள் என்றும் கூறினார்.
கடந்தாண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது அந்த அணியில் வார்னர், ஸ்மித், லபுசக்னே போன்ற வீரர்கள் இல்லை. ஆனால், அடுத்த முறை இந்தியா அங்கு செல்லும் போது அனைவரும் இருப்பார்கள். இந்திய அணியிலும் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இது தவிர பேட்டிங் வரிசையும் அனுபவத்தோடு உள்ளது. எனவே இந்திய அணியால் மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்கு இணையாக அவர்களது சொந்த மண்ணில் போராட முடியும் என்றார்.
இதையும் படிங்க: ஐந்து பந்துவீச்சாளர்களுடன் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ஆஸி.?