பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை அணி 2009ஆம் ஆண்டு கடாஃபி மைதானம் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென யாரும் எதிர்பாராத வகையில் தீவிரவாதிகள் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 7 பேர் காயமடைந்தனர். மேலும் பொதுமக்களில் எட்டு பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள எந்த சர்வதேச அணியும் தயாராக இல்லை.
இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கு பின் அதே இலங்கை அணி மீண்டும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றது. தொடர்ந்து வங்கதேச அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. 10 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் கிரிக்கெட் ஆடும் பாகிஸ்தான் வீரர்களும், மக்களும் கிரிக்கெட்டைக் கொண்டாடி வருகின்றனர். இருந்தும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள சர்வதேச அணிகளிடையே ஏதோரு ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கிறது. இதனைப் போக்கும் வகையில் சங்கக்காரா தலைமையிலான எம்சிசி அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து நான்கு டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
அதற்காக நேற்று லாகூர் வந்த சங்கக்காரா செய்தியாளர்களிடம் பேசுகையில், '' எனக்கு எந்தவொரு நினைவுகூரலும் தேவையில்லை. ஏனென்றால் தாக்குதல் நடந்த அன்றைய நாள் என் நினைவில் என்றும் மறக்காது. அந்த சம்பவம் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதற்காக அல்ல, அதுபோன்ற அனுபவங்கள் நாம் விளையாட்டின் மீதும் வாழ்க்கை மீதும் வைத்துள்ள பார்வைகளை மாற்றி அமைக்கும். அதற்காகத்தான் நினைவில் வைத்துள்ளேன். இதனால் நம் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையும் அதிகரிக்கும்.
அந்த சம்பவத்தைப் பற்றி பேசுவது என்றும் என்னை பாதிக்காது. அந்த சம்பவம் என்றுமே எங்களை இன்னும் வலிமையாக மாற்றியுள்ளது. நீண்ட நாள்களுக்கு பின் மீண்டும் லாகூர் வருவதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இந்த நேரத்தில் தாக்குதலின்போது உயிரிழந்தவர்களையும் நினைவுகூர விரும்புகிறேன்.
சில விரும்பத்தகாத விஷயங்களை ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு முறையில் கையாள்வார்கள். அதுதான் அனைவரையும் ஒன்றிணைக்கிறது. கிரிக்கெட்டில் ஏற்ற, இறக்கங்கள் சாதாரண ஒன்றுதான். இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின்போதுகூட கிரிக்கெட் எங்களுக்குள் ஒரு அற்புதமான உணர்வினைக் கடத்தியது.
அந்தத் தாக்குதல் சம்பவங்களைப் பற்றி நாங்கள் சில நேரங்கள் நகைச்சுவையை வெளிப்படுத்துக்கொள்வோம். அதுபோன்ற சம்பவங்கள்தான் கிரிக்கெட்டர் என்பதைக் கடந்து நாங்களும் மனிதர்கள் என அறிவுறுத்தி செல்கிறது. நாங்கள் யார் என்பதையும் புரிந்துகொண்டோம்.
எம்சிசிக்கு என்று சில தனித்துவ அடையாளமும், பாரம்பரியமும் உள்ளது. அந்த பாரம்பரியத்தை சுற்றுப்பயணம் செய்த நாடுகளில் எல்லாம் விட்டுச்சென்றுள்ளது. கிரிக்கெட்டின் விதிமுறைகளையும், ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பையும் உயிர்ப்புடன் வைப்பதோடு பொதுமக்கள் கிரிக்கெட்டை ரசிக்க வைப்பதும் எம்சிசியின் கடமையாகும்.
நாங்கள் விடுக்கும் செய்தி ஒன்றுதான். நல்ல கிரிக்கெட்டை ஆடுவோம் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம். இந்தத் தொடர் நல்லபடியாக முடிந்து திரும்பி சென்றால், நாங்கள் வந்துபோன செய்தி பாகிஸ்தானை கடந்த மற்ற நாடுகள் அதிகமாக எதிரொலிக்கும்.
அந்த நம்பிக்கையை விதைப்பதற்குதான் பாகிஸ்தான் வந்துள்ளோம். எங்களைப் பின்பற்றி மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆட முன்வரும் என நம்புகிறேன்” என்றார்.
இதையும் படிங்க: யார் இந்த சஞ்சீவ் சாவ்லா? சூதாட்டப் புகாரில் முன்னாள் வீரர்கள் பலர் சிக்குவார்களா?