நியூசிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று வெலிங்டன் மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சொதப்பல் ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. விரைவாக விக்கெட்டுகளை இழந்துத் தடுமாறிய இந்திய அணியை, மீட்க துணைக் கேப்டன் அஜிங்கியா ரகானே தனி ஆளாக போராடினார். அப்போது மழைக்குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
அதன்படி நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ரன்களை எடுத்திருந்தது. ரகானே 38 ரன்களுடனும், பந்த் 10 ரன்களுடனும் களத்திலிருந்தனர்.
இதனிடையே இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கிய போது, இந்திய அணி மேற்கொண்டு பத்து ரன்கள் மட்டும் எடுத்த நிலையில், ரிஷப் பந்த் 19 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த அஸ்வின் முதல் பந்திலேயே ரன் எதுவுமின்றி சவுத்தீ பந்தில் க்ளின் போல்டாக, மீண்டும் இந்திய அணி சரிவைச் சந்தித்தது.
களத்தில் நிதானமாக ஆடிய ரகானேவும் 46 ரன்களில் வெளியேறினார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு சுருண்டது. நியூசிலாந்து பந்துவீச்சில் டிம் சவுத்தீ, அறிமுக வீரர் கைல் ஜேமிசன் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளையும், ட்ரெண்ட் போல்ட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டாம் லாதம் 11 ரன்களில் இஷாந்த் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தற்போது நியூசிலாந்து அணி தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது.
இதையும் படிங்க: மகளிர் டி20 உலகக் கோப்பை: பூனம் புயலில் சிக்கி தோல்வியைத் தழுவிய ஆஸி.