பல்வேறு திருப்புமுனைகளுடன் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு சமனில் முடிந்தது. உலகக்கோப்பை, ஆஷஸ் என இரண்டும் இங்கிலாந்தில் நடைபெற்றதால், அவர்களது ரசிகர்களுக்கு இந்த ஆஷஸ் தொடர் டபுள் ட்ரீட்டாக அமைந்திருந்தது.
ஸ்டீவ் ஸ்மித்தின் கம்பேக், பென் ஸ்டோக்ஸின் மேஜிக், ஆர்ச்சரின் டெஸ்ட் எண்ட்ரி போன்றவற்றால் இந்த சாம்பல் (ஆஷஸ்) தொடர், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை சுவாரஸ்யப்படுத்தியது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரில், இரு அணிகளுக்கும் இருந்த ஒரே ஒற்றுமை ஓப்பனிங் சொதப்பல்தான். சொதப்பலில் யார் நம்பர் ஒன் என்ற அளவிற்கு இரண்டு அணிகளும் போட்டிபோட்டுக் கொண்டு ஓப்பனிங்கில் சொதப்பியது.
இங்கிலாந்து அணியில், ஜேசன் ராய் - ரோரி பர்ன்ஸ், ரோரி பர்ன்ஸ் - ஜோ டென்லி, ஆஸ்திரேலிய அணியில் வார்னர் - பேன்கிராஃப்ட், வார்னர் - மார்கஸ் ஹாரிஸ் என இரண்டு அணிகளிலும் ஓப்பனிங் விக்கெட்டுக்கு ஜோடி மாற்றப்பட்டாலும், சொற்ப ரன்களில் அவர்கள் அவுட் ஆனது மட்டும் மாறாமல் இருந்தது.
இந்தத் தொடரில் மேலே குறிப்பிட்ட ஓப்பனிங் ஜோடி முதல் விக்கெட்டுக்கு மொத்தம் 12.55 ரன்கள் ஆவரேஜ் உடன் 253 ரன்கள்தான் அடித்தது. இதில், ஆஸ்திரேலிய ஜோடி 85 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதில், நான்காவது போட்டிதான் மோசத்திலும் மோசம். வெறும் 11 ரன்கள் வரைக்கும்தான் இந்த ஜோடியால் தாக்குப்பிடிக்க முடிந்தது.
இதன்மூலம், 113 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு டெஸ்ட் தொடரில் முதல் விக்கெட்டுக்கு மிகக் குறைவான ஆவரேஜ் இந்தத் தொடரில்தான் பதிவாகி மோசமான சாதனை படைக்கப்பட்டது. இதனால், தென் ஆப்பிரிக்க - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 1906இல் இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் 14.16 ரன்கள் பேட்டிங் ஆவரேஜ் சாதனை முறியடிக்கப்பட்டது.