13ஆவது தெற்காசிய போட்டி நேபாளத்தின் காத்மண்டு, போக்ஹராவில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று போக்ஹராவில் நடைபெற்ற மகளிருக்கான டி20 கிரிக்கெட் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மாலத்தீவு அணி, நேபாளத்தை எதிர்கொண்டது. முன்னதாக வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மாலத்தீவு அணி ஆறு ரன்களுக்கு ஆட்டமிழந்து, பேட்டிங்கில் படுமோச ஃபார்மில் இருந்தது. இந்த நிலையில், இன்றைய ஆட்டத்திலாவது மாலத்தீவு அணி ஓரளவிற்கு ஆவரேஜ் ஸ்கோரை எடுக்குமா என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், "நான் தலைகீழாகதான் குதிக்கபோகிறேன்" என கவுண்டமனியின் காமெடி வசனத்தைப் போல இன்றைய ஆட்டத்திலும் மாலத்தீவு அணியின் பேட்டிங் தலைகீழாகத்தான் இருந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மாலத்தீவு அணியில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய அய்மா அய்ஷ்நாத் மட்டுமே ரன் எடுத்தார். அதுவும் ஒரு ரன்தான். அவரைத்தவிர பேட்டிங் செய்த மற்ற 10 வீராங்கனைகளும் ஆக்ஷன் ரிப்ளே போல டக் அவுட்டாயினர்.
![Maldives All Out For 8 runs against Nepal](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5298563_a.jpg)
இதனிடையே, ஆட்டத்தின் தொடக்கத்தில் நேபாள வீராங்கனைகள் மாலத்தீவு அணிக்கு ஏழு ரன்கள் உதிரியாக வழங்கினர். இதனால், மாலத்தீவு அணி 11.3 ஓவர்களில் எட்டு ரன்களுக்கு சுருண்டது. நேபாள அணி தரப்பில் அஞ்சலி சந்த் ஒரு ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து, களமிறங்கிய நேபாள அணி 1.1 ஓவர்களிலேயே 9 ரன்களை எட்டி இப்போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதையும் படிங்க: 2.1 ஓவர்... 0 ரன்... ஆறு விக்கெட் ! டி20யில் உலக சாதனை படைத்த நேபாள வீராங்கனை