சிட்னி (ஆஸ்திரேலியா): நியூசிலாந்து அணியின் மூத்த ஆல்ரவுண்டரான கிறிஸ் கெயின்ஸ் (51) இதய பிரச்னை (அதீத துடிப்பு) காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டும், அதற்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. இந்நிலையில், அவர் நேற்று (ஆக. 10) உயர் சிகிச்சைக்காக சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அவரது உடல் நலம் குறித்து மருத்துவமனை கூறியிருப்பதாவது,"கிறிஸ் கெயின்ஸ் அபாயமான கட்டத்தில் இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கேன்பேராவிலிருந்து சிட்னிக்கு மாற்றப்பட்ட பின்னர், அவரது உடல்நிலை சற்று முன்னேற்றம் கண்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுக்கு பிறகு...
நியூசிலாந்து அணிக்காக 1989ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை விளையாடி கிறிஸ் கெயின்ஸ், மொத்தம் 62 டெஸ்ட் போட்டிகள், 215 ஒருநாள் போட்டிகள், இரண்டு டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 3,320 ரன்களை சேர்த்து, 218 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒருநாள் அரங்கில், 4,950 ரன்களைச் சேர்த்துள்ள அவர் 201 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
பல சூதாட்ட சர்ச்சைகளில் சிக்கிய கெயின்ஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, லாரி பணிமனைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: ENG vs IND LORDS TEST: அஸ்வினை சேர்க்கலாமா வேண்டாமா; கோலி திட்டம் என்ன?