டெல்லி: உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை மிகச் சிறப்பாக தலைமை தாங்கியவர்களில் முக்கிய பங்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு உண்டு. இவர் தனது வழிநடத்தலின் மூலம் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன் டிராபி என ஐசிசி கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்று தந்தவர்.
கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான அவர் விக்கெட் கீப்பிங், பேட்டிங் என அசத்தினார். அதன் பின் இந்திய அணிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்ததை மிகச் சிறப்பாக கையாண்டு பல முக்கிய தொடர்களை வென்றுள்ளார். 2019ஆம் ஆண்டு ஓய்வு அறிவித்த அவர் 16 ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் 350 ஒருநாள் போட்டிகள், 98 சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
இந்நிலையில், மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை கவுரவிக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அவரது ஜெர்சி நம்பர் 7-க்கு ஒய்வு அளித்துள்ளது. இதன் மூலம் '7' என பொறித்த ஜெர்சி நம்பரை இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் யாரும் பயன்படுத்த முடியாது. முன்னதாக முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சி 10 என்ற நம்பருக்கு பிசிசிஐ ஒய்வு அளித்தது.
இது குறித்து பிசிசிஐயின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது; "பிசிசிஐயின் இந்த முடிவு தோனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை மனதில் வைத்து கவுரவிக்கும் வகையில் எடுத்தது. நம்பர் 7 எம்.எஸ் தோனியின் அடையாளம் ஆகும். மேலும், அந்த பிராண்டை தக்க வைத்துக் கொள்ள எடுத்த முடிவாகும்" என்றார்.
மேலும், தற்போதைய இந்திய அணியில் விளையாடி வருகிறார் விராட் கோலி (18). இவரது ரசிகர்கள் பலர் 18 என்ற எண் பொறித்த ஜெர்சியை அணிந்து மைதானத்திற்கு வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் வீரர்களான சச்சின் மற்றும் தோனி ஆகியோரின் ஜெர்சி நம்பருக்கு ஓய்வு அளித்தது போல், கோலியின் ஓய்வுக்கு பிறகு அவரது ஜெர்சி நம்பருக்கும் ஓய்வு அளிக்கப்படும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சூர்யகுமார் சதம்.. விக்கெட் வேட்டையில் குல்தீப் யாதவ் - அபார வெற்றி பெற்று டி20 தொடரை டிராவில் முடித்த இந்தியா!