டெல்லி: 2021ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, துரோணாச்சார்யா விருது ஆகியவற்றுக்கு பெயர்களைப் பரிந்துரைக்குமாறு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் (MINISTRY OF YOUTH AFFAIRS AND SPORTS) அறிவித்திருந்தது.
இந்நிலையில், பல்வேறு விளையாட்டு சம்மேளனங்கள் இந்தாண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளுக்கு வீரர்கள், பயிற்சியாளர்களின் பெயரை பரிந்துரை செய்துள்ளன.
கேல் ரத்னா பரிந்துரைகள்
இதில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (ஐசிசி) நாட்டில் விளையாட்டிற்கு வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு, இந்திய மகளிர் அணியின் முன்னணி வீரர் மிதாலி ராஜ், இந்திய ஆடவர் அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை பரிந்துரைத்துள்ளது.
அர்ஜுனா பரிந்துரைகள்
இதையடுத்து, அர்ஜுனா விருதுக்கு இந்திய ஆடவர் அணியின் பேட்ஸ்மேன்கள் ஷிகார் தவான், கே.எல்.ராகுல், வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
பட்டியலில் தவான்
அர்ஜுனா விருதுக்கு தவான், கடந்தாண்டே பரிந்துரைச் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு அவரின் பெயர் பரிந்துரை பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இம்முறையும் அர்ஜுனா விருதுக்கு மகளிர் அணியில் இருந்து யார் பெயரும் பரிந்துரை செய்யப்படவில்லை
இறுதியாக மிதாலி
மகளிர் கிரிக்கெட்டின் அடையாளமாக விளங்கும் மிதாலி ராஜ், மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 22ஆம் ஆண்டை சென்ற வாரம்தான் நிறைவு செய்தார்.
கடந்த 1999ஆம் ஆண்டு அறிமுகமான மிதாலி ராஜ், இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 669 ரன்களையும், 215 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,170 ரன்களையும், 89 டி20 போட்டிகளில் விளையாடி 2,364 ரன்களையும் குவித்துள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு அர்ஜுனா விருதையும், 2015ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், தனது 56ஆவது ஒருநாள் அரைசதத்தைப் பதிவு செய்தார் என்பது கவனிக்கத்தக்கது. மகளிர் கிரிக்கெட்டை இந்தியா மட்டுமில்லாது உலக முழுவதும் கொண்டு சென்றதில் மிதாலி ராஜின் பங்கு அளப்பறியது.
அசத்தும் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின் சில வருடங்களாக இந்திய அணிக்கு டி20, ஒருநாள் என ஷார்டர் ஃபார்மட்டில் விளையாடவில்லை என்றாலும், டெஸ்ட் ஃபார்மட்டில் 79 போட்டிகளில் விளையாடி 413 விக்கெட்டுகளை வீழ்த்தி, உலக அளவில் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு ரோஹித் சர்மா, மணிகா பத்ரா, வினேஷ் போகாத், ராணி ராம்பால், மாரியப்பன் தங்கவேலு ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு தான் முதல்முறையாக ஒரே ஆண்டில் 5 பேருக்கு கேல்ரத்னா விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு ராஜிவ் கேல் ரத்னா விருது பரிந்துரைக்கப்பட்டதாக தகவல்