மும்பை: 15ஆவது ஐபிஎல் சீசனில் நேற்று (மே.4) நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு - சென்னை அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக கேப்டன் டூ பிளசிஸ், விராட் கோலி களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் 62 ரன்கள் சேர்த்தனர். அதன்பிறகு பிளசிஸ் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மேக்ஸ்வெல் 3 ரன்களில் (ரன் அவுட்) தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த ஓவரிலே விராட் கோலி 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மஹிபால் லோம்ரோர், ரஜத் படிதார் இருவரும் நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 123 ரன்னாக இருந்தபோது ரஜத் படிதார் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மஹிபால் லோம்ரோர் 42 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து சென்னை அணி விளையாடியது.
தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். 51 ரன்கள் சேர்த்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ராபின் உத்தப்பா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த ராயுடு 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
டெவோன் கான்வே அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரில் ஜடேஜா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மொயின் அலி சிறிது நேரம் அதிரடி காட்டினார். அவர் 34 ரன்களில் ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் டோனி களத்தில் இருந்தார். இதனால் சென்னை அணி ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் டோனி 3 ரன்களில் ஹேசில்வுட் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: GT vs PBKS: ரபாடா, லிவிங்ஸ்டன் அசத்தல்; குஜராத்தை வென்றது பஞ்சாப்