மெல்போர்ன் : இந்தியாவில் நடைபெற்ற 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் உலகக் கோப்பை வெல்லும் கனவை இழந்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதற்கிடையில், ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக கோப்பையை கைப்பற்றியதை கொண்டாடியது. அந்த அணியின் வீரர்கள் அனைவரும் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதில் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கோப்பையின் மீது கால் வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி பரவியது.
இதனை குறித்து பலரும் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வந்தனர். உத்தர பிரசேத்தை சேர்ந்த பண்டிட் கேசவ் என்பவர் மிட்செல் மார்ஷ் கோப்பையின் மீது கால் வைத்து கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் மனதை புண்படுத்தியதாக கூறி புகார் தொடர்ந்தார். அந்த புகார் தொடர்பாக போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்து உள்ளனர்.
இந்த நிலையில், உலகக் கோப்பையின் மீது கால் வைத்து போஸ் கொடுத்த விவகாரம் குறித்து மிட்செல் மார்ஷ் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் "அந்த புகைப்படத்தில் மரியாதை குறைவான விஷயம் ஏதும் இல்லை. சமூக வலைதளங்களில் அந்த புகைப்படம் அதிகம் வைரலானது குறித்து சொன்னார்கள்.
ஆனால் அது குறித்து நான் பெரிதாக யோசிக்கவில்லை. அந்த புகைப்படத்தில் ஏதும் இல்லை. அவ்வளவுதான்" என்றார். மேலும், உலகக் கோப்பை முடிவடைந்த பின்பு தொடர்ந்து சில வீரர்கள் இந்தியாவிற்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வருபவர்கள் கூறியது சில வார்த்தைகள் பகிர்ந்துள்ளார். "நாங்கள் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுகிறோம். இந்தியாவுக்கு எதிரான போட்டி என்பது மிக பெரியது.
உலகக் கோப்பையை வென்றதும் நாடு திரும்பாமல் தொடர்ந்து டி20 தொடரில் 6 வீரர்கள் விளையாடி வருகின்றனர். அது மிகவும் கடினமான ஒன்று. உலகக் கோப்பையை வென்றதும் நாடு திரும்பி அவர்கள் தங்களது குடும்பத்துடன் கொண்டாடி இருக்க வேண்டும்" என்றார்.
உலக கோப்பை தொடருக்கு பின் ஏழு வீரர்கள் இந்தியாவில் தங்கியிருந்து டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் நிலையில், தற்போது டிராவிஸ் ஹெட் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பினர். மீதமுள்ள 2 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக டிராவிஸ் ஹெட் இந்தியாவில் தங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ரோகித், விராட் கோலி அழுதனர்..உலகக் கோப்பை குறித்து ரவிச்சந்திரன் அஷ்வின் கூறுவதென்ன?