துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கியது. துபாய் மற்றும் சார்ஜாவில் உள்ள மைதானங்களில் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை அணியை வீழ்த்தியது.
அதைத்தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 28) 2ஆவது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்தனர். இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த வகையில் 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை எடுத்தனர்.
அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 42 பந்துகளுக்கு 43 ரன்களையும், இப்திகார் அகமது 22 பந்துகளுக்கு 28 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் 148 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய வீரர்கள் பேட்டிங் செய்தனர். முதல் பந்திலேயே கே.எல். ராகுல் விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார்.
இருப்பினும் அடுத்தடுத்து களமிறங்கிய விராட் கோலி, ரவிந்திர ஜடேஜா நம்பிக்கை ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த வகையில், 19.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்களை எடுத்தனர். 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர். அதிகபட்சமாக விராட் கோலி, ரவிந்திர ஜடேஜா தலா 35 ரன்களையும், ஹர்திக் பாண்ட்யா 33 ரன்களையும் எடுத்தனர். பாகிஸ்தான் வீரர் முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளையும், நசீன் ஷா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை 2022 முழு அட்டவணை