துபாய்: ஆசிய கோப்பை டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இதன் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளும் இடம்பெற்றிருந்தன. முதலாவதாக குரூப் ஸ்டேஜ் ஆட்டங்கள் நடந்தன.
இதில் வங்கதேசம், ஹாங்காங் அணிகள் தோல்வியடைந்து வெளியேறின. சூப்பர் 4 சுற்றுக்குள் நூழைந்துள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதி வருகின்றன. இதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
இந்த சூப்பர் 4 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதி தோல்வியடைந்தது. அதைத்தொடர்ந்து இன்று (செப் 6) இலங்கையுடன் துபாயில் பலப்பரீட்சை நடத்தியது. முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர்.
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (கீப்பர்), தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.
இலங்கை: தசுன் ஷனக (கேப்டன்), பாத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ் (கீப்பர்), சரித் அசலங்க, தனுஷ்க குணதிலக, பானுக ராஜபக்ச, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க.
இந்திய அணி ஆட்டம்: இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் மற்றும் ராகுல் களமிறங்கினர். ராகுல் 7 ரன்களில் தீக்ஷனா பந்தில் எல்.பி.டபுள்யூ ஆனார். அடுத்து களமிறங்கிய கோலி டக் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தார். பின்னர் ரோகித்துடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ரோகித் அரைசதம் அடித்து அசத்தி, அணியின் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தினார். பின்னர் ரோகித் 41 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்த கருணரத்னே பந்து வீச்சில் நிஷங்காவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சிறப்பாக விளையாடி வந்த சூர்யகுமார் 34 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 17 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து வந்த தீபக் ஹூடா 3 ரன்களில் வெளியேற பின்னர் களம் இறங்கிய பண்ட் 17 ரன்களில் அவரும் வெளியேறினார். பின்னர் வந்த புவனேஷ்வர் குமார் டக் அவுட் ஆனார். மறுமுனையில் சற்று சிறப்பாக ஆடிய அஸ்வின் கடைசி நேரத்தில் 15 ரன்கள் சேர்த்தார். இத்துடன் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. இலங்கை தரப்பில் மதுஷனகா 3 விக்கெட்களையும், கருணரத்னே மற்றும் ஷனகா தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இலங்கை அணியின் ஆட்டம்: பின்னர் 174 ரண்களை இழக்கை எதிர்த்து களமிரங்கிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக நிஷங்கா மற்றும் குசல் மெண்டிஸ் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடினர். முதல் 10 ஓவர்களில் இவர்கள் இருவரும் அற்புறமாக விளையாடி ரன் குவித்தனர். இவர்களின் விக்கெட்டை பறிக்க முடியாமல் இந்திய அணி பவுலர்கள் திணறினர்.
நிஷங்கா அரை சதம் அடித்து அசத்தினார். இலங்கை அணி 97 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது. 37 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்த நிஷங்கா, சஹல் பந்தில் ரோகித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய அசலங்கா டக் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய மெண்டிஸ் அரை சதம் அடித்தார். அடுத்து வந்த குணதிலகா தடுமாற்றத்துடன் விளையாடி 1 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து களமிரங்கிய மெண்டிஸ் 2 பந்துகளில் அவுட் ஆனார். இலங்கை அணி அடுத்தடுத்து 4 விக்கெட்கள் இழந்ததால் சற்று தடுமாறத் தொடங்கியது. அடுத்து ஜோடி சேர்ந்த ராஜபக்சே மற்றும் ஷனகா சிறப்பாக விளையாடினர். இருவரும் அணியை வெற்றி பெறச் செய்யும் நோக்கில் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினர். கடைசி 2 ஓவர்களில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில், புவனேஷ்வர் குமார் 19 ஆவது ஓவரை வீசினார்.
அந்த ஓவரில் ஷனகா 2 பவுண்டரிகள் அடித்தார். இலங்கை பேட்ஸ்மன்கள் 2 ஒயிடுகளுடன் அந்த ஓவரில் 14 ரன்கள் எடுத்தனர். இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை அர்ஷ்தீப் வீசினார். கடைசி ஓவர் ப்ரஷ்ருடன் இரு அணிகளும் விளையாடி நிலையில், இலங்கை முதல் நான்கு பந்தில் 5 ரன்கள் அடித்தது. கடைசி 2 பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், பைஸில் 2 ரன்கள் கிடைத்ததால் இலங்கை அணி எளிதாக வென்றது.
ராஜபக்சே 17 பந்துகளில் 25 ரன்களுடனும், ஷனகா 18 பந்துகளில் 33 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். இந்திய அணி தரப்பில் சஹல் 3 விக்கெட்களையும் அஸ்வின் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்தப்போட்டியில் இலங்கை வென்றதன் மூலம், ஆசிய கோப்பை டி 20 போட்டிகளில் இலங்கையை இந்தியா வென்றதில்லை என்ற சோக வரலாறு தொடர்கிறது. அதேநேரம், சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த 2 தோல்விகளால், இந்திய அணியின் இறுதிப்போட்டி தகுதி கேள்விக்குறியாகியுள்ளது.
இதையும் படிங்க: கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த ரெய்னா... வருத்தத்தில் ரசிகர்கள்