பர்மிங்காம்: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் இன்று தொடங்குகிறது. இதுவரை நடைபெற்ற 72 ஆஷஸ் தொடர்களில் ஆஸ்திரேலியா அணி 34 தொடர்களையும், இங்கிலாந்து அணி 32 தொடர்களையும் கைப்பற்றியுள்ளது. 6 ஆஷஸ் தொடர் போட்டியில் 96 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்தவரை ஸ்டிவன் ஸ்மித், ஹெட் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். பவுலிங்கில் பொறுத்தவரை ஹெசல்வுட் அணிக்குத் திரும்பியுள்ளார். இங்கிலாந்து அணியில் மிடில் ஆர்டரில் ஜோ ரூட், ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ் எனப் பலமாக உள்ளது. பவுலிங்கில் ஆண்டர்சன், பிராட் அனுபவம் கைகொடுக்கும்.
இந்த ஆஷஸ் தொடரைக் கைப்பற்ற இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றிய உற்சாகத்தில் ஆஸ்திரேலியா அணி களமிறங்குகிறது. அதே நேரத்தில் பிரண்டன் மெக்கல்லம் பயிற்சியாளர் ஆன பின்பு அனுபவம் மற்றும் இளம் வீரர்களுடன் புத்துணர்ச்சியுடன் களமிறங்குவதால் அனைத்து போட்டிகளும் 'nail biting thriller' போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்
ASHES வரலாறு: ’ஜென்டில்மென் கேம்’ என கருதப்படும் கிரிக்கெட் விளையாட்டு காலப் போக்கில் பல்வேறு வளர்ச்சிகள் அடைந்தாலும் ஒரு சில அணிகள் விளையாடும் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அதிகம் விரும்புவதுண்டு. அந்த வகையில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டிகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போட்டிகளை கூறலாம். இந்தியா, பாகிஸ்தான் போட்டியை ரசிகர்கள் விரும்பி காண்பதற்கு அரசியல் காரணங்களும் உண்டு. ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் அனல் பறக்கும் ஆஷஸ் தொடருக்கு ஒரு வித்தியாசமான வரலாற்று பின்புலம் உள்ளது.
கிரிக்கெட் சற்று பிரபலமடையத் தொடங்கிய 1880ஆம் ஆண்டு காலகட்டத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா அணி அவ்வப்போது விளையாடும். அந்த போட்டிகள் அனைத்திலும் இங்கிலாந்து அணி பயிற்சி போட்டியைப் போல ஆஸ்திரேலியாவை எளிதாக வீழ்த்தும். இந்நிலையில் ஆஸ்திரேலியா அணி இந்த கலங்கத்தை துடைக்க கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டு 1882ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. ஆஸ்திரேலியா அணி ஒரு முறை இங்கிலாந்தை வீழ்த்தியதற்கே ஆஸ்திரேலியா பத்திரிகைகள் இங்கிலாந்தைக் கலாய்த்துத் தள்ளியது.
அதில் ‘தி ஸ்போர்ட்டிங் டைம்ஸ்’ என்ற பத்திரிக்கை, ”இங்கிலாந்து கிரிக்கெட் உயிரிழந்துவிட்டது. உடலைத் தகனம் செய்ய சாம்பலை (ashes) ஆஸ்திரேலியாவுக்கு எடுத்து சென்றனர்” என தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது. இங்கிலாந்து ரசிகர்கள் மத்தியில் இந்த செய்தி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தியின் விளைவாக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சுற்றுப்பயணம் அறிவித்தது. அப்போதைய இங்கிலாந்து கேப்டன் இவோ ப்லிக் “இங்கிலாந்து கிரிக்கெட் சாம்பலை மீண்டும் எங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்வோம்” என கூறினார்.
அதேபோல் இங்கிலாந்து அணி அத்தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அப்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்கள் அத்தொடரில் பயன்படுத்திய ஸ்டெம்ப் பெயில்ஸ் எரித்து அதன் சாம்பலை பெர்ஃயூம் பாட்டிலில் அடைத்து கொடுத்தனர். அன்று முதல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டிகள் ஆஷஸ் தொடர் என அழைக்கப்படுகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும்.
1970க்கு மேல் கிரிக்கெட் உலகில் வெஸ்ட் இண்டிஸ் அணி விவியன் ரிச்சர்ட்ஸ், கிளைவ் லாய்ட் என பல வீரர்கள் மூலம் மிகப்பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வந்தாலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் கிரெக் சாப்பல், ஆலன் பார்டர் மற்றும் இயான் போத்தம் என வலுவான வீரர்களை கொண்டிருந்தது.
1990 காலகட்டத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணி ஸ்டீவ் வாக், மார்க் வாக், ரிக்கி பாண்டிங், ஹைடன், கில்கிறிஸ்ட், சைமண்ட்ஸ், மெக்ராத், பிரெட் லீ என அசுர பலத்துடன் வீழ்த்த முடியாத அணியாக இருந்தது. இங்கிலாந்து அணி இந்த காலகட்டங்களில் சற்று சுமாரான அணியாக காட்சியளித்தது. இங்கிலாந்து அணி மற்ற அணிகளுடன் சுமாராக விளையாடினாலும் ஆஷஸ் தொடர் என வந்துவிட்டால் முழு முயற்சி மேற்கொண்டு தொடரை வெல்ல போராடும். இரு அணிகளும் ஆஷஸ் தொடர் வெல்வதை கௌரவமாக கருதும்.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆஷஸ் தொடரில் மறக்க முடியாத சீட் நுனியில் உட்கார வைக்கும் டெஸ்ட் போட்டிகள் பல உள்ளன. 2005ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஷஸ் தொடரை கைப்பற்றியது. அந்த தொடரில் கடைசி டெஸ்ட் போட்டி, கடைசி நாளில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழந்த நிலையில் பிரட் லீ, கேஸ்ப்ரோவிக்ஸ் ஜோடி கடைசி வரை போராடி 4 ரன்னில் ஆஸ்திரேலியா அணி தோல்வியடையும்.
அதே போல் கடந்த 2019ஆம் ஆண்டு ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுக்கு களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் (135) வெற்றி பெற 76 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சதம் விளாசி மற்றொரு பக்கம் விளையாடும் பவுலருக்கு ஸ்டிரைக் தராமல் தனி ஆளாக நின்று இங்கிலாந்து அணிக்கு ஆஷஸ் கோப்பை பெற்று தந்தது என பல போட்டிகள் சொல்லிக் கொண்டே போகலாம்.
இதையும் படிங்க: சேலம் சின்னப்பம்பட்டியில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' - ஜூன் 23ம் தேதி திறப்பு!