சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பு சார்பில் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இந்தாண்டு ஜனவரி 12 முதல் 17ஆம் தேதிவரையும், பாங்காக் ஓபன் தொடர் ஜனவரி 19 முதல் 24ஆம் தேதிவரையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தொடருக்கான எட்டு பேர் கொண்ட இந்திய அணி ஜனவரி மூன்றாம் தேதி தாய்லாந்திற்கு சென்றது.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் முன்னதாக தங்களது நாட்டில் கரோனா பரிசோதனை மேற்கொண்டு, சோதனை முடிவில் தொற்று இல்லை என்பதை உறுதி செய்திருக்க வேண்டும் என்றும், அதன்பின் தாய்லாந்திலும் அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இத்தொடரில் பங்கேற்கும் 246 வீரர்கள் உள்பட, பயிற்சியாளர்கள், போட்டி நடுவர்கள், பேட்மிண்டன் கூட்டமைப்பினர், தொலைக்காட்சி தயாரிப்பாளர் குழு என மொத்தம் 824 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவுகள் ஜனவரி ஆறாம் தேதி வெளியாகின. இதில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
அதன்பின் தற்போது கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளின் கீழ் வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இத்தொடர் முடியும்வரையிலும் வீரர்கள் கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளின் கீழ் இருப்பார்கள் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஐஎஸ்எல் : நார்த் ஈஸ்ட்டை எதிர்கொள்ளும் ஹைதராபாத்!