இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடர் மார்ச் 26ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெறவுள்ளது. இதனிடையே, வயிறு உபாதையால் அவதிப்பட்டுவரும் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், இந்தத் தொடரிலிருந்து தான் வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2015இல் நடைபெற்ற இந்தியன் ஓபன் பேட்மிண்டன் பட்டத்தை சாய்னா நேவால் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக பேட்மிண்டனில் அசத்திவந்த சாய்னா இந்தத் தொடரில் பங்கேற்காகதது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்தத் தொடரின் மகளிர் ஒற்றையர் சுற்றுப்பிரிவில் இந்தியா சார்பாக பி.வி.சிந்து மட்டுமே போட்டியிடுகிறார். இதனால், இவரது ஆட்டத்தின் மீது எதிர்பார்ப்பு தானாகவே அதிகரித்துள்ளது. அதேபோல் ஆடவர் ஒற்றையர் சுற்றுப்பிரிவில் இந்தியா தரப்பில் நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், சமீர் வெர்மா ஆகியோர் மட்டுமே பங்கேற்கின்றனர்.